பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

219


அவள் இதயத்தில் இனந்தெரியாத ஒரு மங்கிய வேதனை இலேசாக எழும்.

“அது மட்டும் சீக்கிரம் வந்துவிட்டால்...”

காலையில் ஆலைச் சங்கு அலறியது. அந்திரேயும் அவளது மகன் பாவெலும் சீக்கிரமே தங்கள் சாப்பாட்டை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள், அவளுக்கு ஏதாவது பதிற்றுக் கணக்கான வேலைகளை விட்டுச்செல்வார்கள். பகல் முழுதும் அவள் கூண்டுக்குள் அகப்பட்ட அணிற்குஞ்சு மாதிரி ஒடியாடி வேலை செய்வாள். சாப்பாடு தயாரிப்பாள்; பசை காய்ச்சுவாள், சுவரொட்டி விளம்பரங்களுக்கு மை தயாரிப்பாள். திடீர் திடீரென்று எங்கிருந்தோ வந்து தோன்றி பாவெலுக்குப் பல செய்திகளைக் கொண்டு வந்துவிட்டு, மாயமாக மறைந்து செல்லும் இனந் தெரியாத மனிதர் பலரை வரவேற்பாள். அவர்கள் வந்து சென்ற பிறகு அவர்களுக்கிருந்த பரபரப்பு அவள் மனதிலும் குடிபுகுந்துவிடும்.

அநேகமாக ஒவ்வொருநாள் இரவும் தொழிலாளரை மே தினக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் சுவரொட்டி அறிக்கைகள் வேலிப் புறங்களிலும் போலீஸ் நிலையக் கதவுகளிலும் ஒட்டப்பட்டு வந்தான். ஒவ்வொரு நாளும் அம்மாதிரியான அறிக்கைகள் தொழிற்சாலையிலும் காணப்பட்டன. காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து, போகிறவர் காலடியில் விழுந்து புரளும். நகரிலிருந்து துப்பறியும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மூலைக்குமூலை நின்றுகொண்டு. சாப்பாட்டு வேளையில் தொழிற்சாலைக்கு உற்சாகமாய்ப் போவதும் வருவதுமாய் இருக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருடைய முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் போலீஸ்காரர்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு ஒவ்வொருவரும் ஆனந்தப்பட்டார்கள், வயதான தொழிலாளர்கள் கூடச் சிரித்துக்கொண்டே, தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

‘இவர்கள் செய்கிற காரியத்தைத்தான் பாரேன்.”

எங்கு பார்த்தாலும் தொழிலாளர்கள் கும்பல் கும்பலாக நின்று மே தின அறைகூவலைப்பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை எங்கும் கொந்தளித்துக்