பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

223


அவள் முகம் ஒளிபெற்றது. வலது புருவம் ஏறியேறி இறங்கிக் கொண்டிருந்தது.

ஆலைச் சங்கின் இரண்டாவது ஓசை அவ்வளவு உரத்துக் கேட்கவில்லை. அதில் பழைய அதிகாரத் தொனியும் தொனிக்கவில்லை. அதனது கனத்த ஈரம் படிந்த குரலில் சிறு நடுக்கம் தென்பட்டது. வழக்கத்துக்கு மீறி அது வெகு நேரம் அலறிக் கொண்டிருப்பதாகத் தாய்க்குப் பட்டது.

அடுத்த அறையிலிருந்து ஹஹோலின் தெளிவான ஆழ்ந்த குரல் ஒலித்தது.

“கேட்கிறதா, பாவெல்?”

யாரோ தரைமீது நடந்து செல்வது கேட்டது; அவர்களில் யாரோ ஒருவர் நிம்மதியோடு கொட்டாவிவிடும் ஓசையும் கேட்டது.

“தேநீர் தயார்!” என்று கத்தினாள் தாய்.

“நாங்கள் எழுந்துவிட்டோம்” என்று உற்சாகமாகப் பதிலளித்தான் பாவெல்.

“சூரியன் உதயமாகிவிட்டது. வானத்தில் ஒரே மேகமாயிருக்கிறது. இன்றைக்கு மேகமில்லாது இருந்தால் நன்றாயிருக்கும்’ என்றான் ஹஹோல்.

அவன் தூக்கக் கலக்கம் தெளியாது முகத்தைச் சுழித்துக்கொண்டு சமையலறைக்கும் தடுமாறிக்கொண்டே ஆனால், உற்சாகமாக வந்தான்.

‘வணக்கம். அம்மா? எப்படித் தூங்கினீர்கள்?’

தாய் அவனருகே சென்று மெதுவாக சொன்னாள்:

“நீ அவன் பக்கமாகவே போகவேண்டும், அந்தர்ரியூஷா.”

“நிச்சயமாய்!” என்றான் ஹஹோல், ‘அம்மா. ஒன்று மட்டும் உங்களுக்கு நிச்சயமாயிருக்கட்டும். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வரையிலும், ஒருவர் பக்கம் ஒருவராகத்தான். இருவருமே முன்னேறிச் செல்வோம். தெரிந்ததா?”

“நீங்கள் இரண்டு பேரும் என்ன குசுகுசுக்கிறீர்கள்?’ என்று கேட்டான் பாவெல்.

“ஒன்றுமில்லை, பாஷா!”

“வேறொன்றுமில்லை. என்னைக் கொஞ்சம் நன்றாக முகத்தைக் கழுவிக்கொண்டு போகச் சொல்கிறாள். அப்படிப் போனால்தான் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து மயங்குவார்கள்?” என்று