பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

225


ஒரே ஒரு வழிதான் பட்டது. சூரியனைப் பார்த்து நாக்கைத் துருத்தி வக்கணை காட்டினேன்; “ஏ! சிவந்த தலைப் பிசாசே! எனக்கு இந்த அடி ஒண்ணும் வலிக்கலே! வலிக்கவே இல்லை!” என்று கத்தினேன். அதில் எனக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்தது.”

“நீ ஏன் அதைச் சிவந்த தலைப் பிசாசு என்றாய்?” என்று கேட்டுச் சிரித்தான் பாவெல்.

“அதற்குக் காரணம் வேறு, எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சிவந்த தலைக் கொல்லன் இருந்தான். அவன் தாடியும் சிவப்பு. அவன் ஒரு குஷிப் பேர்வழி, அன்பானவன். சூரியன் அவனைப்போலவே இருந்ததாக எனக்குத் தோன்றியது.

தாய்க்கு இந்த வேடிக்கைப் பேச்சுக்களைக் கேட்பதற்குப் பொறுமையில்லை. எனவே, அவள் பொறுமையிழந்து கேட்டாள்.

“இன்றைக்கு நீங்கள் எப்படி அணிவகுத்துப் போகப் போகிறீர்கள்? அதைப்பற்றி ஏன் பேசவில்லை ?”

‘அதெல்லாம் ஏற்கெனவே முடிவு பண்ணி ஏற்பாடாகிவிட்டது. அதை இப்போது போட்டுக் குழப்புவானேன்?” என்று அமைதியாகச் சொன்னாள் ஹஹோல், “ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தால் நாங்களெல்லாம் கைதாகிவிட்டாலும் நிகலாய் இவானவிச் உன்னிடம் வந்து இனி ஆக வேண்டியதைக் கூறுவான், அம்மா!”

“ரொம்ப நல்லது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“நாம் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வந்தாலென்ன?” என்று ஏதோ நினைவாய்ச் சொன்னான் பாவெல்.

“இப்போது வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது. நேரம் வருவதற்கு முன்னாலேயே போலீஸ்காரர்களின் கண்களை ஏன் உறுத்தவேண்டும் என்கிறாள், உன்னை. அவர்களுக்கு ஏற்கெனவே நன்றாய்த் தெரியும்” என்றான் அந்திரேய்.

பியோதர் மாசின் அவசர அவசரமாக உள்ளே வந்தான். அவனது முகம் பிரகாசமுற்றுக் கன்னங்கள் சிவந்து காணப்பட்டன. அவனது ஆனந்தமயமான உத்வேகம் அவர்களது காத்துக்கிடக்கும் சங்கடத்தை தளர்த்தியது.

“எல்லாம் ஆரம்பமாகிவிட்டது... ஜனங்கள் எழுச்சி பெற்றுவிட்டார்கள்! முகங்கள் எல்லாம் வெட்டரிவாள் மாதிரி கூர்மை பெற்றுப் பிரகாசிக்க அவர்கள் தெருவிலே வந்து கூடிவிட்டார்கள், நிகலாய் வெஸோவ்ஷிகோல், வசீலி கூஸெவ், சமோய்லவ் எல்லோரும் தொழிற்சாலை வாசலில் நின்றுகொண்டு பிரசங்கம் செய்கிறார்கள்.