பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

மக்சீம் கார்க்கி


எவ்வளவு தொழிலாளர்கள் வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்! வாருங்கள், போவதற்கு நேரமாகிவிட்டது. அப்போதே மணி பத்தடித்துவிட்டது!” என்றான் அவன்.

“சரி. நான் போகிறேன்’ என்று உறுதியாகச் சொன்னான் பாவெல்.

“பாருங்களேன்! மத்தியானத்துக்கு மேல் தொழிற்சாலையில் உள்ளவர்கள் அத்தனை பேரும் வெளிவந்து விடுவார்கள்” என்றான் பியோதர்.

அவன் ஓடினான்.

“அவன் காற்றில் எரியும் மெழுகுவர்த்தி மாதிரி இருக்கிறான்” என்றாள் தாய். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து சமையலறைக்குள் உடை மாற்றிக்கொள்ளப் போனாள்.

“எங்கே புறப்படுகிறார்கள், அம்மா?” என்று கேட்டான்.அந்திரேய்.

“உங்களோடுதான்?” என்று பதிலளித்தாள் தாய்.

அந்திரேய் தன் மீசையை இழுத்து விட்டவாறே பாவெலைப் பார்த்தான். பாவெல் தனது தலைமயிரைப்புலமாகக் கோதி விட்டவாறே தாயிடம் போனான்.

“அம்மா, நானும் உன்னிடம் எதுவும் பேசமாட்டேன்; நீயும் என்னிடம் எதுவும் பேசக்கூடாது. சரிதானே?”

“ரொம்ப சரி, ரொம்ப சரி. கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்” என்று முனகினாள் அவள்.

27

அவள் வெளியே வந்தபோது, எங்குப் பார்த்தாலும் அவள் எதிர்பார்த்த இரைச்சல், உத்வேக மயமான ஜனங்களின் கூச்சல் நிறைந்து ஒலித்தது. வாசல் நடைகளிலும், ஜன்னல்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றவாறு பாவெலையும் அந்திரேயையும் ஜனங்கள் ஆவல் நிறைந்த கண்களுடன் பார்ப்பதைக் கண்டதும் அவளது கண்கள் இருண்டு, அந்த இருளில் ஏதோ ஒரு புது நிற ஒளி நிழலிட்டு ஆடுவது போல் அவளுக்குத் தோன்றியது.

ஜனங்கள் அவர்களோடு குசலம் விசாரித்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் அன்று சேமம் விசாரித்த பாவனையில் ஏதோ ஒரு புதிய அர்த்தம் போதித்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் அமைதியோடு சொன்ன வார்த்தைகள் அவள் காதில் அரை குறையாக விழுந்தாள்.