பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

மக்சீம் கார்க்கி


செல்லும் திறப்பான்போல, அந்தக் கூட்டத்துக்குள் ஊடுருவி உள்ளே சென்றுவிட்டான்.


செழித்துக் கனத்த குரலில் அவன் சத்தமிட்டான். “தோழர்களே! உலகில் பல்வேறு இன மக்கள் குடியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். யூதர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள், தாத்தாரியர்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. உலகில் இனங்கள் இரண்டே இரண்டுதான்—ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாத இரண்டே மனித குலங்கன்தான் இருக்கின்றன. ஒன்று பணக்காரர் குலம்; மற்றொன்று பஞ்சை ஏழைகளின் குலம்! ஜனங்கள் வெவ்வேறு விதமாக உடை உடுத்தலாம்; வெவ்வேறு மாதிரியான மொழிகளில் பேசலாம். ஆனால் பிரஞ்சுக்காரராகட்டும், ஜெர்மானியராகட்டும். ஆங்கிலேயராகட்டும்—அவர்களில் பணக்காரராயிருப்பவர்கள் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால், அவர்களை அனைவருமே தொழிலாளர்களை ஒன்று போலவே நடத்துகிறார்கள் என்பதை, அவர்கள்தான் தொழிலாளரை உறிஞ்சிக் குடிக்கும் கொள்ளை நோய் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!”

கூட்டத்தில் யாரோ சிரிப்பது கேட்டது.

“ஆனால், அதே சமயத்தில் — தாத்தாரியனானாலும், பிரஞ்சுக்காரனானாலும் அல்லது துருக்கியனானாலும் எந்த நாட்டுத் தொழிலாளியானாலும் சரி அவர்களையும் நீங்கள் பாருங்கள். அப்படிப் பார்த்தால், ருஷியாவிலுள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடு கெட்டு வாழ்கிறார்களோ, அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.”

அந்தச் சந்துப் பாதையில் மேலும் மேலும் ஜனங்கள் கூடினார்கள். அவர்கள் தங்கள் கழுத்துக்களை எட்டி நீட்டிக்கொண்டும் குதிக்காலால் எழும்பி நின்றுகொண்டும் ஒருவார்த்தை கூடப் பேசாது அவன் பேசுவதைக் கேட்டார்கள்.

அந்திரேய் தன் குரலை மேலும் உயர்த்தினான்:

“வெளி நாடுகளிலுள்ள தொழிலாள மக்கள் இச்சாதாரண உண்மையை ஏற்கெனவே தெரிந்துகொண்டுவிட்டார்கள், இன்று, இந்த மே மாதப் பிறப்பன்று...”

“போலீல்!” என்று யாரோ கத்தினார்கள்.