பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

231


நாலு குதிரைப் போலீஸ்காரர்கள் அந்தச் சந்துக்கள் நேராக வந்து குதிரைகளைக் கூட்டத்துக்குள் செலுத்தினார்கள். தங்களது கையிலிருந்த சவுக்குகளால் வீசி விளாசி அறைந்து கொண்டு சத்தமிட்டார்கள்.

‘கலைந்து போங்கள்!’

மக்கள் தங்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டே அந்தக் குதிரைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். சிலர் பக்கத்திலிருந்த வேலிப்புறத்தில் ஏறிக்கொண்டுவிட்டார்கள்.

“அடேடே! குதிரைகளின் முதுகிலே பன்றிகளைப் பாருடோய்! ‘வீராதி வீரருக்கு வழிவிடு’ என்று இவை கத்துவதைக் கேளுடோய்!” என்று எவனோ உரத்துக் கத்தினான்.

ஹஹோல் தெருவின் மத்தியில் அசையாது நின்று கொண்டிருந்தான். இரண்டு குதிரைகள் அவன் பக்கமாக தலையை அசைத்தாட்டிக்கொண்டே நெருங்கி வந்தன. அவன் ஒரு பக்கமாக ஒதுங்கினான். அந்த சமயத்தில் தாய் அவனது கையைப் பற்றி பிடித்து அவனைத் தன் பக்கமாக விருட்டென்று இழுத்தாள்.

“நீ பாவெல் பக்கமாக நிற்பதாய் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய், ஆனால், இங்கேயோ தன்னந்தனியாக. எல்லாத் தொல்லைகளையும் நீயே ஏற்கிறாய்” என்று முணுமுணுத்தாள் அவள்.

“ஆயிரம் தடவை மன்னிப்புப் போதுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல்.

ஒரு கனமான, பயங்கரமான நடுக்கம் நிறைந்த ஆபாச உணர்ச்சி தாயின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து மேலெழும்பி. அவளை ஆட்கொண்டது. அவளது தலை சுழன்றது. இன்பமும் துன்பமும் மாறிமாறி ஏதோ ஒரு மயக்கம் உண்டாயிற்று. மத்தியானச் சாப்பாட்டுக்கு எப்போதடா சங்கு அலறும் என்று ஆதங்கப்பட்டுத் தவித்தாள் அவள்.

அவர்கள் தேவாலயம் இருந்த சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். தேவாலயச் சுற்றுப்புறத்தில் உற்சாகம் நிறைந்த இளைஞர்களும் குழந்தைகளுமாக சுமார் ஐநூறு பேர் கூடியிருந்தார்கள். கூட்டம் முன்னும் பின்னும் அலைமோதிக்கொண்டிருந்தது. மக்கள் பொறுமையற்று தங்கள் தலைகளை நிமிர்த்தி உயர்த்தித் தூரத்தையே ஏறிட்டுப் பார்த்து எதையோ எதிர்நோக்கித் தவித்துக்கொண்டு நின்றார்கள். ஒரே உத்வேக உணர்ச்சி எங்கும் பரிணமித்துப் பரந்தது. சிலர் செய்வது இன்னதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பிரமாதமான தைரியசாலிகள் போலப் பாவனை பண்ணிக்