பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

மக்சீம் கார்க்கி


கொண்டிருந்தார்கள். பெண்களின் கசமுசப்புக்குரல் மங்கியொலித்தது. அவர்கள் பக்கத்திலிருந்து ஆண்கள் விலகிச் சென்றார்கள்; வைது திட்டும் வசவுக் குரல்கள் மங்கி ஒலித்தன. அந்தக் கும்பிக் குமைந்து நின்ற கும்பலில் ஒரு இனந்தெரியாத வெறுப்புணர்ச்சி சலசலத்தது.

“மீத்யா!” என்று ஒரு ஒடுக்கக் குரல் கேட்டது. “உன்னைக் கவனித்துக்கொள்!”

‘என்னைப் பற்றிக் கவலைப்படாதே’ என்று ஒலித்தது பதில்.

சிஸோவின் அழுத்தமான குரல் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது.

“இல்லை. நாம் நமது பிள்ளைகளைப் புறக்கணித்து உதறித் தள்ளிவிடக்கூடாது. நம்மைவிட அவர்களுக்கு அதிகமாக அறிவு உண்டு. துணிச்சல் உண்டு, சாக்கடைக் காசு சம்பவத்தின்போது, அதைத் துணிந்து எதிர்த்து நின்றது யார்? அவர்கள்தான்! அதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள். அதற்காகச் சிறைக்குச் சென்றார்கள்; ஆனால் அதனால் பயன் அடைந்ததோ நாம் அனைவரும்தான்.”

ஜனங்களுடைய குரல்களையெல்லாம் விழுங்கியவாறு, ஆலைச் சங்கு தனது அழுமூஞ்சிக் குரலில் அலறியது. கூட்டத்தாரிடையே ஒரு சிறு நடுக்கம் குளிர்ந்தோடிப் பரவியது. உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். ஒரு கணநேரம் எல்லோரும் வாய்மூடி கம்பென்று இருந்தார்கள். எல்லோரும் விழிப்போடு நின்றார்கள். பலருடைய முகங்கள் வெளுத்துப் பசந்தன.

“தோழர்களே!’ பாவெலின் செழுமையான மணிக்குரல் கணீரென ஒலித்தது. தாயின் கண்களில் கதகதப்பான நீர்த்திரை உறுத்துவது போலிருந்தது. அவன் விசுக்கென்று தாவிச் சென்று தன் மகனருகே நின்றுகொண்டாள். எல்லோரும் பாவெலின் பக்கமாகத் திரும்பினார்கள்; காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புத் தூளைப் போல எல்லோரும் அவனைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டார்கள்.

தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். தைரியமும் கர்வமும் கனன்று பிரகாசிக்கும் அவனது கண்களை மட்டுமே கவனித்துப் பார்த்தாள்.

“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம்; இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை—அறிவு, நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்”