பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மக்சீம் கார்க்கி


அவன் ஒரு பாறாங்கல்லையாவது, பலகையாவது, கம்பியையாவது கையில் தூக்கிக்கொண்டு தன் கால்களை அகட்டி ஊன்றி, தனது எதிரியை அமைதியுடன் எதிர்பார்த்து நிற்பான். அவனது மயிரடர்ந்த கரங்களையும் கண்ணிலிருந்து கழுத்துவரையிலும் காடாய் அடர்ந்து வளர்ந்து மண்டிய கரிய தாடியையும், கோபாவேசமான முகத்தையும் கண்டுவிட்டாலே போதும். யாரும் நடுநடுங்கிப் போவார்கள். ஆனால் ஜனங்கள் அவனது கண்களைக் கண்டுதான் அதிகம் பயந்தார்கள். ஏனெனில் அவை சிறியனவாகவும், உருக்குத் தமர் உளியைப் போல் துளைக்கும் கூர்மை பெற்றனவாகவும் இருந்தன. அந்தக் கண்களின் பார்வையைக் கண்டதுமே தாங்கள் எதோ ஒரு அசுர சக்தியின் முன்னால் இரக்கமோ பயமோ ஒரு சிறிதும் காட்டாது தம்மை எதிர்த்துத் தாக்கத் தயாராக இருக்கும் ஒரு மிருக வெறிக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்டதாகவே அவர்களுக்குத் தோன்றும்.

“சரி, இங்கிருந்து ஓடுங்கடா, கழிசடைகளே!” என்று அவன் முரட்டுக் குரலில் சொல்லுவான். அவனது முகத்தை மறைத்து அடர்ந்திருக்கும் தாடிக்கு ஊடாக அவனது மஞ்சள் பூத்த பற்கள் மின்னி மறையும். உடனே அந்த மனிதர்கள் கோழைத்தனமாக வாய்க்கு வந்தபடி வைது கொண்டே பின்வாங்கிவிடுவார்கள்.

“கழிசடைகளே!” என்று அவர்களுக்குப் பின்னே கத்துவான். அப்பொழுது அவனது கண்கள் ஏளன பாவத்தோடு குத்தூசியைப்போல் கூர்ந்து நோக்கும். பிறகு அவன் தன் தலையை நிமிர்ந்து நடந்தவாறே, அவர்களைத் தொடர்ந்து சென்று உரத்துச் சத்தம் போடுவான்.

“சரி, எவனடா சாக விரும்புகிறவன்?”

எவனுமே சாக விரும்புவதில்லை, அவன் அதிகமாகப் பேசமாட்டான்; ‘கழிசடை’ என்பது அவனது பிரியமான வாசகம் அவன் போலீசாரையும் தொழிற்சாலை அதிகாரிகளையும் தன் மனைவியையும் இந்த வார்த்தையால்தான் அழைப்பான்.

“இங்கே பார், என் கால்சராய் கிழிந்து போயிருப்பதைப் பார்க்கவில்லையாடி, கழிசடையே!”

ஒரு முறை பதினாலு வயதுச் சிறுவனான தன் மகன் பாவெலின் தலைமயிரைப் பற்றி இழுத்து. உதைக்கப்போனான்; ஆனால், அந்தப் பையனோ உடனே ஒரு பெரிய சுத்தியலைக் கையில் தூக்கிக்கொண்டு, கடூரமாகச் சொன்னான்.

“விடு என்னை, தொடாதே!”