பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

மக்சீம் கார்க்கி


‘அவன் போகட்டும்” என்று சொன்னாள் தாய், “நீ அவனைப்பற்றிக் கவலைப்படாதே. நானும் கூடத்தான் முதலில் பயந்து போனேன். அதோ முன்னால், கொடியைப் பிடித்துக்கொண்டு போகிறான் பார். அவன்தான் என் மகன்!”

“ஏ. முட்டாள்களே! எங்கேயடா போகிறீர்கள்? அங்கே சிப்பாய்கள் நிற்கிறார்களடா!”

நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த அந்தப் பெண்பிள்ளை தாயின் கரத்தைத் தனது எலும்புக் கரத்தால் திடீரெனப் பற்றிப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டாள்,

“ஆஹா! அவர்கள் பாடுவதைக் கேளம்மா. என் மகனும் கூடப் பாடுகிறான்!

“நீ ஒன்றும் பயப்படாதே” என்று சொன்னாள் தாய்; “இது ஒரு புனிதமான காரியம். நினைத்துப்பார், - கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால், கிருஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”

இந்த எண்ணம் அவள் மனத்தில் திடீரென்று பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த எண்ணத்தில் பொதித்திருந்த தெளிவான, எளிதான உண்மையை உணர்ந்து, அவள் ஒரே புளகாங்கிதம் எய்தினாள். தனது கையை அழுத்தமாகப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள்.

“ஆமாம். கிறிஸ்துவுக்காக மக்கள் சென்று செத்திராவிட்டால் கிறிஸ்துவே, இருந்திருக்கமாட்டார்!” என்று வியப்பு நிறைந்த புன்னகையோடு திரும்பவும் அதைக் கூறிக்கொண்டாள்.

சிஸோவ் அவள் பக்கமாக வந்தான்.

“இன்று பகிரங்கமாகவே புறப்பட்டுவிட்டீர்களா?” என்று சொல்லிக்கொண்டே அவன் தன் தொப்பியை எடுத்து அந்தப் பாட்டின் சத்தத்திற்குத் தக்கவாறு ஆட்டிக்கொண்டான், “பாட்டா பாடுகிறார்கள்! ஆஹா, இது எவ்வளவு அருமையான பாட்டு, அம்மா!”

பேரணியில் சேர, வீரர்
ஜாரரசன் கேட்கிறான்:
ஜாரரசன் போர் நடத்தத்
தாரும் உங்கள் மக்களை!

“இவர்களுக்குக் கொஞ்சம்கூடப் பயமில்லையே!” என்றான் சிஸோவ்; “செத்துப்போன என் மகன் மட்டும் இருந்தால்....”