பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

237


தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது. எனவே அவள் வேகமாகச் சொல்ல முடியாமல் பின்தங்கிவிட்டாள். ஜனக்கூட்டம் அவளை நெருக்கித்தள்ளி. ஒரு வேலிப்புறமாக நெட்டித் தள்ளியது. அவளைக் கடந்து ஒரு பெரிய ஜனத்திரள் அலைமோதிக்கொண்டு முன்னேறியது. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அதைக் கண்டு அவள் ஆனந்தமுற்றாள்.

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஏதோ ஒரு பிரம்மாண்டமான பித்தளையாலான எக்காளம் தனது அகன்ற வாயின் வழியாக; அந்தப் பாடலைப் பொழிந்து தள்ளுவது போலவும், அந்த எக்காள நாதத்தைக் கேட்டு ஜனங்கள் விழித்தெழுவது போலவும் விழித்தெழுந்து போருக்குக் கிளம்புவது போலவும் தோன்றியது. மேலும் அந்த எக்காள முழக்கம் மற்றவர்களின் உள்ளத்தில், ஏதோ ஒரு இனந்தெரியாத இன்ப உணர்ச்சியையும் புதுமையையும் ஆர்வம் மிகுந்த குறுகுறுப்பையும் உண்டாக்குவது. போலவும் தோன்றியது. ஒரு பக்கத்தில் அந்த, நாதம் சிலர் மனத்தில் தைரியமற்ற நம்பிக்கைகளுக்கு இடம்கொடுத்தது. சிலர் மனத்தில், அவர்களது உள்ளத்தினுள்ளே நெடுங்காலமாகப் புழுங்கித் தவித்த கோப உணர்ச்சியையெல்லாம் மடை திறந்த வெள்ளமாகத் திறந்து விட்டுக்கொண்டிருந்தது.

காற்றிலே அசைந்தாடும் அந்தச் செங்கொடியையே எல்லோரும் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அதோ அவர்கள் போகிறார்கள்!” என்று யாரோ தன்னை மறந்த வெறிக்குரலில் கத்தினான். “தம்பிகளா! நீங்கள் அழகாயிருக்கிறீர்களாடா!’

அந்த மனிதனின் உள்ளத்தில் வார்த்தைகளின் சக்திக்கு மீறி வாய்விட்டுச் சொல்ல முடியாத எதோ ஒரு உணர்ச்சி மேலிட்டுப் பொங்கியது. எனவே அந்த உணர்ச்சியை வெளியிடுவதற்காக அவன் ஏதோ வஞ்சினமாகச் சபதம் சொல்லிக்கொண்டான். ஆனால் சூரிய உஷ்ணத்தால் கலைக்கப்பட்ட நாகப்பாம்பைப் போல், இருண்டு போன குருட்டுத்தனமான அடிமைத்தனம் நிறைந்த குரோத உணர்ச்சி புஸ்ஸென்று சீறி விஷ வார்த்தைகளைக் கக்கிற்று.

“மதத் துரோகிகள்!” என்று ஒரு வீட்டு ஜன்னலிலிருந்தவாறு தனது முஷ்டியை ஆட்டிக்கொண்டே ஒருவன் சத்தமிட்ட்டான்.