பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

மக்சீம் கார்க்கி


பியோதர் மாசினுடைய குரல் பளபளப்பான பட்டு நாடாவைப் போல் சுருண்டு நெளிந்து ஒலித்தது: அந்தப் பாட்டில் தீர்மானமும் வைராக்கியமும் தொனித்தது.

வெற்றி பெறுமோர் லட்சியமாம்
விடுதலைக்காக நீங்களெல்லாம்...

அவனது தோழர்கள் அவனோடு சேர்ந்து அடுத்த அடிகளைப் பாடினார்கள்:

உற்ற செல்வம் அனைத்தோடும்!
உயிரும் கொடுத்தீர்! கொடுத்தீரே

“ஆஹா—ஹா!” என்று யாரோ ஒருவன் கரகரத்தான். “ஒப்பாரி பாடுகிறார்களடா!” நாய்க்குப் பிறந்த பயல்கள்!”

“கொடு ஒரு அறை?” என்று ஒரு கோபக் குரல் கத்தியது.

தாய் தன் கைகளால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தாள். சிறிது நேரத்துக்கு முன்பு அந்தத் தெரு முழுதும் நிரம்பித் ததும்பிய ஜனங்கள், இப்போது அந்த நால்வர் மட்டுமே கொடியைத் தூக்கிக்கொண்டு முன்னே செல்வதைக் கண்டதும், உள்ளம் கலங்கித் தடுமாறிப்போய் நின்றாள். சிலர் அந்த நால்வரையும் பின்பற்றிச் செல்லத் தொடங்கினார்கள். எனினும், அவர்கள் ஒவ்வொரு அடி முன்னேறும்போதும். ஒவ்வொருவனும் அந்தத் தெரு தனது உள்ளங்காலைக் சுட்டுப் பொசுக்குவது போல் உணர்ந்து பயந்து துள்ளி, பின்வாங்கி நின்றுவிட்டான்

முடிவில் ஒரு நாள் கொடுங்கோன்மை
மூட்டோடற்றுப் போகுமடா!

பியோதர் மாசின் உபதேசம் செய்வதுபோல் பாடினான். அவனது குரலுக்குப் பல உரத்த குரல்கள் தீர்மானமாகவும், கடுமையாகவும் பதிலளித்தன.

அடிமை மக்கள் விழித்தெழுவர்
அந்நாள், அந்நாள், அந்நாளே!

என்றாலும் அந்தப் பாட்டுக்கு மத்தியில் கசமுசப்புக் குரல்களும் கேட்டன:

“அவர்கள் இதோ உத்தரவு கொடுக்கப் போகிறார்கள்!”

அதே சமயம் முன் புறத்திலிருந்து ஒரு கூரிய குரல் திடீரென்று ஒலித்தது: