பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

9


“என்னது?” என்று கேட்டுக்கொண்டே அவனது தந்தை நெட்டையாகவும் ஒல்லியாகவுமிருந்த தன் மகனின் உருவத்தை நோக்கி, மரத்தை நோக்கிச் செல்லும் நிழலைப் போல முன்னேற முனைந்தான்.

“நான் பட்டபாடு போதும். இனிப் படமாட்டேன்!” என்று கூறிக்கொண்டே சுத்தியலை உயர்த்தினான் பாவெல்.,

தந்தை அவனை ஒரு முறை பார்த்தான். பிறகு தனது மயிரடர்ந்த கரங்களை முதுகுக்குப்பின் கோர்த்துக் கொண்டான்.

“ரொம்ப சரி!” என்று சிறு சிரிப்புடன் சொன்னான். பிறகு ஒரு பெரு மூச்சுவிட்டுவிட்டு: “கழிசடைப் பயலே, ரொம்ப சரி!” என்றான்.

இதற்குப் பின் தன் மனைவியிடம் சொன்னான்.

“இனிமேல் நீ என்னைப் பணம் கேட்காதே. இன்று முதல் பாவெலே உன்னைக் காப்பாற்றுவான்!”

“ நீ கிடைக்கிற கூலியையெல்லாம் குடித்துத் தீர்த்துவிடப் போகிறாயா?” என்று துணிந்து கேட்டாள் அவள்.

“ஏ, கழிசடையே! அது ஒன்றும் உன் வேலையல்ல, வேண்டுமென்றால் நான் வைப்பாட்டிகூட வைத்துக் கொள்வேன்...!”.

அவன் வைப்பாட்டி வைத்துக் கொள்ளாவிட்டாலும் அன்று முதற்கொண்டு, இரண்டு வருஷம் கழித்து அவன் செத்துப் போன காலம்வரை தன் மகனை மதிக்கவுமில்லை. அவனோடு பேசவுமில்லை.

அவனிடம் அவனைப்போலவே பூதாகாரமாகவும் மயிர் அடர்ந்ததாகவுமுள்ள ஒரு நாயும் இருந்தது. அந்த நாய் ஒவ்வொரு நாள் காலையிலும் அவனைத் தொடர்ந்து தொழிற்சாலை வரையிலும் செல்லும்; மாலையில் அவனது வருகைக்காகத் தொழிற்சாலை வாசலில் காத்து நிற்கும். விலாசவ் பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சாராயக் கடையாகச் சென்று வருவான். வழியில் எவரிடமும் பேச மாட்டான். எனினும் யாரையோ இனம் காண முயல்வதுபோல ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்ப்பான். அவனது நாயும் தனது அடர்ந்த வாலை ஆட்டிக் கொண்டு அவனுக்குப் பின்னாலேயே நாள் முழுதும் திரிந்து கொண்டிருக்கும். நன்றாகக் குடித்துவிட்டு வீடு திரும்பியபிறகு. விலாசவ் சாப்பிட உட்காருவான். அப்போது அவன் தன் நாய்க்குத் தனது உணவு பாத்திரத்திலிருந்தே உணவு கொடுப்பான். அவன் அந்த நாயை அடித்ததும் கிடையாது. திட்டியதும் கிடையாது. அதுபோலவே அந்த நாயிடம் கொஞ்சிக் குலாவியதும் கிடையாது. சாப்பாடு முடிந்த பிறகு, சாப்பிட்ட பாத்திரங்களை அவனது மனைவி உடனே