பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

மக்சீம் கார்க்கி


அப்பால், அந்திரேயின் முகத்தை அவள் பார்த்தாள். அவன் புன்னகை செய்துகொண்டே அவளுக்குத் தலை வணங்கினான்.

“ஆ!” என் கண்மணிகளே... அந்திரியூஷா! பாஷா!” என்று அவள் கத்தினாள்.

“போய் வருகிறோம். தோழர்களே!” என்று அவர்கள் சிப்பாய்களின் மத்தியிலிருந்து சொன்னார்கள்.

பல குரல்கள் அவர்களுக்கு எதிரொலியளித்தன. அந்த எதிரொலி ஜன்னல்களிலிருந்தும், எங்கோ மேலேயிருந்தும், கூரைகளிலிருந்தும் வந்து குவிந்தன.

29

யாரோ அவளது மார்பில் ஓங்கி அறைந்தார்கள்; தனது கண்ணில் படிந்திருந்த நீர்த்திரையின் வழியாக, அவள் அந்தச் சிவந்து கனன்ற குட்டி அதிகாரியின் முகத்தைத் தன் எதிரே கண்டாள்.

“ஏ. பெண் பிள்ளை ! தூரப்போ !” என்று அவன் கத்தினான்.

அவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனது காலடியில் கொடியின் கம்பு இரண்டாக முறிந்து கிடப்பதையும் அதன் ஒரு முனையில் சிவப்புத் துணித்துண்டு கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் குனிந்து அதை எடுத்தாள், அந்த அதிகாரி அவளது கையிலிருந்து அதைப் பிடுங்கி, தூரப்பிடித்துத் தள்ளி, பூமியில் ஓங்கி மிதித்தவாறு சத்தமிட்டான்.:

“நான் சொல்கிறேன். போய்விடு!”

அந்தப் சிப்பாய்களின் மத்தியிலிருந்து அந்தப் பாட்டு ஒலித்தது:

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

எல்லாமே சுற்றிச் சுழன்று நடுங்கி மிதந்தன. காற்றில் தந்திக் கம்பிகளின் இரைச்சலைப் போல, ஒரு முணுமுணுப்புச் சத்தம் நிரம்பி நின்றது. அதிகாரி விடுவிடென்று ஓடினான்.

“உங்கள் பாட்டை நிறுத்துங்கள்” என்று அவன் வெறிபிடித்துக் கூவினான். “ஸார்ஜெண்ட் மேஜர் கிராய்னவ்......”

கீழே போட்ட உடைந்து போன கொடிக்கம்பை நோக்கி, தாய் தட்டுத் தடுமாறிச் சென்றாள். மீண்டும் அதைக் கையில் எடுத்தாள்.

“அவர்களது வாயை மூடித் தொலை!”