பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

மக்சீம் கார்க்கி


இதயம் வற்றி மெலிந்து வறண்டு போயிற்று. அவளது உதடுகளும் வறண்டு போயின, அவளது வாயில் ஈரப்பசையே இல்லை. அவளது கரங்கள் நடுங்கின, முதுகெலும்புக் குருத்துக்கள் குளிர் உணர்ச்சி குளிர்ந்து பரவியது.

அன்று மாலை போலீஸ்காரர்கள் வந்தார்கள். அவள் அவர்களை வியப்பின்றிப் பயமின்றிச் சந்தித்தாள். அவர்கள் ஆரவாரமாக உள்ளே நுழைந்தார்கள்; ஆத்ம திருப்தியும் ஆனந்தமும் கொண்டவர்களாக அவர்கள் தோன்றினார்கள். அந்த மஞ்சள் முக அதிகாரி தனது பல்லை இளித்துச் சிரித்துக்கொண்டே பேசினான்;

“சௌக்கியமா? நான் இப்போது சந்திப்பது மூன்றாவது முறை இல்லையா?”

அவள் பேசவில்லை. வெறுமனே தனது வறண்ட நாக்கை உதடுகளின் மீது ஒட்டினாள். அந்த அதிகாரி அவளுக்கு ஏதேதோ உபதேச வார்த்தைகளைச் சொன்னான். பேசுவதில் அவன் ஆனந்தம் காண்பதாக அவள் உணர்ந்தாள். ஆனால் அவனது பேச்சு அவளைப் பீதியுறச் செய்யவில்லை. அந்த வார்த்தைகள் அவளைப் பாதிக்கவே இல்லை. ஆனால் அவன், “கடவுளுக்கும் ஜாருக்கும் உன் மகன் சரியான மரியாதை காட்டாது போனதற்கு, அதை நீ அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போனதற்கு. உன்னைத்தான் குற்றம் சொல்ல வேண்டும், அம்மா” என்று சொன்ன பிறகு மட்டும் அவள் கதவருகே தான் இருந்த இடத்தில் நின்றவாறே கம்மிய குரலில் பதில் சொன்னாள்.

“எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி, அவர்கள் தண்டிப்பார்கள்.”

“என்ன?” என்று கத்தினான் அதிகாரி” “உரக்கப் பேசு.”

“நான் எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள் என்று சொன்னேன்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

அவன் ஏதேதோ கோபத்தோடும் விறுவிறுப்போடும் முணுமுணுத்துக்கொண்டான்; ஆனால் அவனது வார்த்தைகள் அவளுக்குக் கேட்கவில்லை. மரியர் கோர்சுனவா அன்று நடந்த சோதனைக்கு ஒரு சாட்சியாக அழைத்து வரப்பட்டாள். அவள் தாய்க்கு அடுத்தாற்போல் நின்றாள், எனினும் அவள் தாயைப் பார்க்கவில்லை. எப்போதாவது அந்த அதிகாரி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். உடனே அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அந்த ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்: