பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

261


அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன; எல்லாம் நிலை குலைந்து தலைகீழாய்க் கிடந்தன, தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள் காணப்பட்டன.

அவள் எழுந்தாள்: முகங்கை கழுவவோ, பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி, அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள். சமையலறையில் கிடந்த கம்பின்மீது—கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக்கிடந்த அந்தக் கம்பின் மீது—அவள் பார்வை விழுந்தது. அவள் அதைக் குனிந்து எடுத்து, அடுப்பில் வைக்கப் போனாள். ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி. அதை ஒழுங்காக மடித்து, தனது பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள். பிறகு ஜன்னல்களையும் தரையையும் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்துவிட்டு உடை உடுத்திக்கொண்டாள். பின்னர் அவள் சமையலறையில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்தாள் அவள் மனத்தில் அதே கேள்வி மீண்டும் எழுந்தது.

“இனி என்ன?”

தான் தனது காலைப் பிரார்த்தனையைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்ரகங்களை நோக்கி வந்தாள், அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள்; பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் ஒரே சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில், தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக்கிடந்து, இயற்கைக்கு மீறிய சம்பவங்களைப்பற்றி அமைதியாகச் சிந்தித்துக்கொண்டிருப்பதைப்போல, அதிசய மோனம் நிலலிக்கொண்டிருந்தது.

திடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாள்; சவுசாய்லவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம் பூங்காவனம்; பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம். தடாகம் முழுவதிலும் நீரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தின் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று. அவள் அந்தக் தடாகக்கரை வழியாக நடந்து சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப்படகு அந்தக் கரிய நீர்த்தடத்தின் மீது, பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு