பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

மக்சீம் கார்க்கி


வாழ்க்கையின் மென்மையும் கதகதப்பும் சேருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு ஒரு உணர்வு தோன்றியது. அவனது லாவகமின்மை, வேடிக்கையான சாமர்த்தியமின்மை மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட்ட அவனது விசித்திர நடத்தை, ஞான ஒளி வீசும். எனினும் குழந்தை நோக்குக்கொண்ட அவனது பிரகாசமான கண்கள் முதலியவெல்லாம் அவளது இதயத்தைத் தொட்டுவிட்டன. பிறகு அவள் மனம் அவளது மகன்பால் திரும்பியது; மீண்டும் மே தின வைபவத்தின் சம்பவங்கள் அவள் கண் முன் நிழலாடிச்சென்றன. எனினும் அந்தச் சம்பவத்தின் நினைவுச் சித்திரத்தில் இப்போது ஒரு புதிய அர்த்தமும். புதிய குரலும் அவளுக்குத் தொனித்தனர். அன்றைய தினத்தைப் போலவே, அந்த தினத்தைப் பற்றிய சோக உணர்ச்சியிலும் ஏதோ ஒரு விசேஷத் தன்மை இருந்தது என்றாலும் அந்தச் சோக உணர்ச்சி முஷ்டியால் ஓங்கிக் குத்தித் தரையிலே மோதி விழச்செய்யும் உணர்ச்சி போல் இல்லை. அந்த உணர்ச்சி இதயத்துக்குள் பன்மடங்கு வேதனையோடு துளைத்துத் துருவிப் புகுந்து, கோப உணர்ச்சியை மெதுமெதுவாகத் தூண்டி, முதுகை நிமிர்த்தி நேராக நிற்கச் செய்யும் உணர்ச்சியாக இருந்தது.

“நமது குழந்தைகள் உலகினுள்ளே புகுந்து புறப்பட்டுவிட்டார்கள்!” என்று அவள் நினைத்தாள். அப்போது அவள் திறந்துகிடக்கும் ஜன்னலின் வழியே, இலைகளின் சலசலப்போடு கலந்து வரும் தனக்குப் பழக்கமற்ற பட்டணத்து இரைச்சலைக் காது கொடுத்துக் கேட்டாள். அந்தச் சப்தங்கள் எங்கோ தொலைவிலிருந்து மங்கித் தேய்ந்து களைத்துச் சோர்ந்து போய் வந்தன. அந்த அறைக்குள்ளே வரும்போது அந்தச் சப்த அலைகள் அநேகமாகச் செத்துத்தான் ஒலித்தன.

மறுநாள் காலையில் அவள் தேநீர்ப் பாத்திரத்தைத் தேய்த்துத் துலக்கி, தேநீருக்காக வெந்நீர் காய வைத்தாள். அரவமின்றி மேஜையைச் சரி செய்தாள். பிறகு நிகலாய் எழுந்து வருவதை எதிர்நோக்கிச் சமையலறையில் காத்திருந்தாள், அவன் இருமிக்கொண்டே கதவைத் திறந்தான். ஒரு கையால் தன் மூக்குக் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டும் மறு கையால் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டும் அவன் வந்தான். காலை வணக்கம் கூறிக்கொண்ட பிறகு, அவள் தேநீர்ப் பாத்திரத்தை அடுத்த அறைக்குள் கொண்டுபோனாள்; அதற்குள் அவன் தரையெல்லாம் தண்ணீரைக் கொட்டி முகம் கை கழுவினான். தனக்குத்தானே முனகிக்கொண்டு, தனது பல் விளக்கும் பிரஷையும் சோப்பையும் கீழே தழுவவிட்டான்.

சாப்பிடும் போது அவன் தாயைப் பார்த்துச் சொன்னான்: