பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

271


“நான் விவசாய இலாகாவில் எனக்குப் பிடிக்காத வேலை யொன்றைப் பார்த்து வருகிறேன். நம்முடைய விவசாயிகள் எப்படி நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறதுதான் என் வேலை.”

ஒரு குற்றப் புன்னகையோடு அவன் மேலும் பேசினான்:

“பட்டினிதான் விவசாயிகளை அகாலத்திலேயே கல்லறைக்குள் தள்ளிச் செல்கிறது. அவர்களது குழந்தைகளும் பிறக்கும்போதே சோனியாகப் பிறந்து, இலையுதிர் காலத்தின் ஈசல் பூச்சிகளைப் போல் மாண்டு மடிகின்றன. எங்களுக்கும் இது தெரியும்; இதற்குரிய காரணமும் எங்களுக்குத் தெரியும். இந்தக் காரணத்தின் வளர்ச்சியைப் படிப்படியாகக் கவனித்துக்கொண்டு இருப்பதற்கு எங்களுக்குச் சம்பளம் கூடக் கொடுக்கிறார்கள். ஆனால், இப்படியே இது போய்க் கொண்டிருந்தால்....”

“நீங்கள் ஒரு மாணவரா என்று கேட்டாள் தாய்”

“இல்லை. நான் ஆசிரியர். என் தந்தை வியாத்தியாவிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மானேஜர். ஆனால், நானோ ஆரிசியர் வேலைக்குத்தான் படித்தேன். கிராமத்திலே இருந்தபோது நான் முஜீக்குகளுக்குப் புத்தகங்களைக் கொடுத்து உதவினேன்; அதன் காரணமாக, என்னைச் சிறையில் போட்டார்கள். தண்டனைக் காலம் முடிந்த பிறகு நான் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்காரனாக வேலை பார்த்தேன். ஆனால் எனது ஜாக்கிரதைக் குறைவினால் மீண்டும் என்னைச் சிறையில் போட்டார்கள். கடைசியாக என்னை அர்ஹாங்கெல்சுக்கு நாடு கடத்திவிட்டார்கள். அங்கும் அங்கிருந்த கவர்னரின் வெறுப்புக்கு நான் ஆளானேன். அதன் காரணமாக மீண்டும் என்னை வெண்கடல் கரையிலுள்ள ஒரு சிறு கிராமத்துக்கு நாடு கடத்தினார்கள். அங்கு ஒரு ஐந்து வருஷ காலம் வாழ்ந்தேன்...”

சூரிய ஒளி நிறைந்த அந்த அறையில் அவனது குரல் மளமளவெனப் பொழிந்தோடியது. இதற்கு முன்பே இது மாதிரி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறாள் தாய். எனினும் அந்தக் கதைகளைச் சொல்பவர்கள் ஏன் இத்தனை அமைதியோடு, ஏதோ தவிர்க்கமுடியாததொன்றைப் பேசுவதுபோல், அவற்றைக் கூறுகிறார்கள் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

“இன்று, என் சகோதரி வருகிறாள்.” என்றான் அவன்.

“அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதா?”.

“அவள் ஒரு விதவை. அவளது கணவன் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டுச் சென்றான். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி