பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

மக்சீம் கார்க்கி


விட்டான். இரண்டு வருஷங்களுக்கு முன்னால், அவன் ஐரோட்டாவில் காசநோயால் செத்துப் போனான்.”

“அவள் உங்களைவிட இளையவளா?”

“ஆறு வருஷம் மூத்தவள். நான் அவளுக்கு மிகவும் கடமைப்பட்டவன். அவள் இங்கு வந்து சங்கீதம் வாசிப்பது வரை நீங்கள் பொறுத்திருங்கள். அது அவளுடைய பியானோவாத்தியம்தான். பொதுவாகச் சொன்னால், இங்குள்ள பொருள்களில் பெரும்பாகம் அவளுடையவைதாம். புத்தகங்கள் மட்டுமே என்னுடையவை.

“அவள் எங்கு வசிக்கிறாள்?”

“எங்கும்தான்” என்று சிறு புன்னகையோடு பதில் சொன்னாள் அவன். “எங்கெல்லாம் ஒரு துணிச்சலான ஆசாமி தேவையோ அங்கெல்லாம் அவள் இருப்பாள்.”

“அவள் இந்த மாதிரி-இந்த மாதிரி வேலைக்குக் கூடச் செல்கிறாளா?”

“ஆமாம். நிச்சயமாய்” என்றான் அவன்.

அவன் சீக்கிரமே போய்விட்டான்; தாய் “இந்த மாதிரி வேலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். அந்த வேலைக்காக ஒவ்வொரு நாளும் அமைதியோடும் விடா முயற்சியோடும் தங்களைத் தாமே தத்தம் செய்து கொள்ளும் மனிதர்களைப் பற்றி நினைக்கும் போது, ஏதோ ஒரு மலையின் முன்னே இரவு வேளையில் நிற்பது போல் அவளுக்குத் தோன்றும். மத்தியானத்துக்கு மேல், நெட்டையான அழகிய பெண் ஒருத்தி வந்தாள்.

அவள் கரியநிற உடையுடுத்தியிருந்தாள். தாய் கதவைத் திறந்தவுடன் அவள் தன் கையிலிருந்த மஞ்சள் நிறமான. சிறு பையைக் கீழே நழுவ விட்டுவிட்டு தாயின் கையைப் பற்றிப் பிடித்தாள்.

“நீங்கள் தானே பாவெல் விகாய்லவிச்சின் தாய்?” என்று கேட்டாள்.

“ஆம்!” என்று பதிலுரைத்தாள் தாய். எனினும் அந்தப் பெண்ணின் அழகிய கோலத்தைக் கண்டது முதல் அவளுக்கு என்னவோ போலிருந்தது.

“நீங்கள் எப்படி இருப்பீர்களென்று கற்பனை எண்ணியிருந்தேனோ. அப்படியே இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து வசிக்கப் போவதாக என் தம்பி எழுதியிருந்தான்” என்று அவள் கூறிக்கொண்டே கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தொப்பியைக் கழற்றினாள். “நான் வெகு காலமாகப் பாவெல் மிகாய்லவிச்சோடு நட்புரிமை கொண்டவள், அவன் உங்களைப் பற்றிக் கூறியிருக்கிறான்.”