பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மக்சீம் கார்க்கி


பிரக்ஞையை, போதை முற்றும் துடைத்துவிடவில்லை. எனவே அவனது மூளைக்குள்ளே ஒரே ஒரு கேள்வி மட்டும் முட்டி மோதிக்கொண்டிருந்தது.

“குடித்திருக்கிறேனா? குடித்திருக்கிறேனா?”

அவன் தன் தாயின் அன்பைக் கண்டு தடுமாறினான்; அவளது கண்ணில் மிகுந்த சோகம் அவன் உள்ளத்தைத் தொட்டது. அவன் அழ நினைத்தான்; எனினும் அந்த உணர்ச்சியை அமுக்கடிப்பதற்காக, தன் குடிவெறியை அதிகமாக வெளிக்காட்டிக் கொண்டான்.

ஈரம் படிந்து கலைந்து போயிருந்த அவனது தலைமயிரைக் கோதிக்கொடுத்தாள் அவனது தாய்.

“நீ இப்படிச் செய்யக் கூடாது!” என்று அமைதியாகச் சொன்னாள்.

அவனுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. பிறகு பலமாக வாந்தியெடுத்தான். அதன் பின்னர் தாய் அவனைப் படுக்கையில் கொண்டுபோய்ப் படுக்க வைத்து, வெளிறிப் போன அவனது நெற்றியின் மீது ஒரு ஈரத்துணியைப் போட்டாள். அது அவனுக்கு ஓரளவு தெளிவைக் கொடுத்தது; எனினும் அவனைச் சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் நீச்சலடித்து மிதப்பது போலிருந்தன. அவனது கண்ணிமைகள் கனத்துத் திறக்க முடியாதபடி அழுத்திக் கொண்டிருந்தன. தன் வாயில் உறைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கார நெடியின் உணர்ச்சியோடு, அவன் தன் கண்ணிமைகளை லேசாகத் திறந்து பெரிதாகத் தெரியும் தன் தாயின் முகத்தைப் பார்த்தான். ஏதோ தொடர்பற்று நினைத்தான்;

“நான் இன்னும் சின்னப் பிள்ளைதான், இதற்குள் குடித்திருக்கக் கூடாது. ஆனால், மற்றவர்கள் குடிக்கிறார்களே; அவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. நான் மட்டும் இப்படியாகிவிட்டேன்...... “

எங்கிருந்தோ அவனது தாயின் இனிமையான குரல் ஒலித்தது.

“இப்படிக் குடிக்க ஆரம்பித்தால் நீ என்னை எப்படிக் காப்பாற்றப் போகிறாய்?”

“எல்லோரும்தான் குடிக்கிறார்கள்” என்று கண்களை மூடிக்கொண்டே பதில் சொன்னான் பாவெல்.

அவனது தாய் பெருமூச்சுவிட்டாள், அவன் சொன்னது சரி, சாராயக் கடை ஒன்றில் மட்டும் தான் ஜனங்கள் ஓரளவேனும் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அவளும் அறிவாள்.