பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

மக்சீம் கார்க்கி


சொன்னான் அந்தப் பெண். “அவர்களுக்கு மட்டும் விசாரணையைச் சீக்கிரமே நடத்தினால்! அவர்களை நாடு கடத்திவிட்டவுடனேயே பாவெல் மிகாய்வலிச் அங்கிருந்து தப்பியோடி வருவதற்கு நாம் உடனடி!பாக ஏற்பாடு செய்து தருவோம். அவன் இப்போது இரங்கு அவசியம் இருந்தாக வேண்டும்.”

தாய் வியந்துபோய் சோபியாவைப் பார்த்தாள். சோபியா தனது சிகரெட் கட்டையை எங்கு போடுவது என்பதற்காக அங்குமிங்கும் இடம் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, அவள் அந்தச் சிகரெட் கட்டையை ஒரு பூத்தொட்டியிலிருந்த மண்ணில் புதைத்து அமுக்கினாள்.

“ஐயோ! அது பூக்களைக் கெடுத்துவிடுமே! என்று தன்னையறியாமல் கூறினாள் தாய்.

“மன்னிக்க வேண்டும்” என்றால் சோபியா. “நிகலாயும் இதே விஷயத்தைத்தான் எனக்கு எப்பொழுதும் சொல்லுவோன்.”

அவள் அந்தச் சிகரெட் கட்டையை அதிலிருந்து எடுத்து, ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள்.

இதைக் கண்டவுடனே தாய் மீண்டும் ஒரு சங்கட உணர்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஒரு குற்றவுணர்வுடன் சொன்னாள்:

“என்னை மன்னியுங்கள்! நான் வேண்டுமென்று அப்படிச் சொல்லவில்லை. என்னையறியாமலே வாய் வந்துவிட்டது, உங்களுக்குப் போதிக்க நான் யார்?”

“நான் அசுத்தம் பண்ணினால் போதித்தால் என்னவாம்?” என்று தோளை உலுக்கிக்கொண்டே கேட்டாள் சோபியா. “சரி. காப்பி தயாராய் விட்டதா? ரொம்ப நன்றி. ஒரே ஒரு கோப்பைதானா? உங்களுக்கு ஒன்றும் வேண்டாமா?”

திடீரென்று அவள் தாயின் தோளைப் பற்றிப்பிடித்து அவளைத் தன்னருகே இழுத்து அவளது கண்களை ஆழ்ந்து நோக்கிக்கொண்டே கேட்டாள்

“நீங்கள் என்ன வெட்கப்படுகிறீர்களா?”

தாய் லேசாகப் புன்னகை புரிந்தாள்.

“இப்பொழுதுதான் சிக்ரெட் கட்டையைப்பற்றி உங்களிடம் சொன்னேன். அதற்காக நான் வெட்கப்படுகிறேனா என்று கேட்கிறீர்களா?” என்றாள் தாய். தனது வியப்புணர்ச்சியை மூடி மறைக்காமல் அவள் மீண்டும் ஏதோ கேட்கும் பாவனையில் பேசினாள்: