பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

275


“நேற்றுத்தான் நான் இங்கு வந்தேன். அதற்குள்ளாக இதை என் சொந்த வீடு போலவே கருதி நடந்து வருகிறேன். எதற்கும் அஞ்சாமல், என்ன சொல்லுகிறோம் என்பதே தெரியாமல்....”

“அப்படித்தானிருக்க வேண்டும்” என்றாள் சோபியா.

“என் தலையே சுற்றுகிறது. நானே எனக்கு அன்னியமாய்ப் போய்விட்டதுபோல் தோன்றுகிறது” என்று மேலும் பேசத் தொடங்கினாள் தாய். “முன்பெல்லாம் ஒரு நபரிடம் நான் என் மனத்திலுள்ள விஷயத்தை வெளியிட்டுக் கூறத் துணிவதென்றால் அதற்கு எனக்கு அந்த நபரோடு ரொம்ப நாள் பழக்கம் வேண்டும். ஆனால், இப்போதோ என் இதயம் எப்போதும் திறந்துகிடக்கிறது. எனவே இதற்குமுன் நான் எண்ணிப் பார்த்திராத விஷயங்களைக்கூட, திடீரெனச் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.”

சோபியா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டே தனது சாம்பல் நிறக் கண்களில் மிருதுவான ஒளிததும்பத் தாயைப் பார்த்தாள்.

“அவன் தப்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அப்படி ஓடிவந்த பிறகு அவனால் எப்படி வாழ முடியும்? என்று தன் மனத்துக்குள் அழுத்திக்கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டு, மனப் பாரத்தைக் குறைத்துக்கொண்டாள் தாய்.

“அது ஒன்றும் பிரமாதமில்லை என்று கூறிக்கொண்டு இன்னொரு கோப்பை காப்பியை ஊற்றிக்கொண்டாள் சோபியா. “இப்படி ஓடி வந்தவர்களில் எத்தனையோ பேர் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே அவனும் வாழ்வான். நான் அப்படி ஒரு ஆசாமியைச் சந்தித்தேன். அவனை அவன் வசிக்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றேன், அவனும் நமக்கு இன்றியமையாத ஆசாமிதான். அவனை. ஐந்து வருஷகாலத்திற்கு நாடு கடத்தினர். ஆனால் அவன் அங்கு மூன்றரை மாதம்தான் காலம் தள்ளினான்.”

தாய் அவளது முகத்தையே சிறிது நேரம் பார்த்தாள். பிறகு புன்னகை புரிந்தாள். அதன் பின் தலையை அசைத்துக்கொண்டே மெதுவாகச் சொன்னாள்:

“மே தினக் கொண்டாட்டம் என்னிடம் ஏதோ ஒரு மாறுதலை உண்டாக்கிவிட்டதுபோல் எனக்குத் தோன்றுகிறது. அது என்ன என்பதை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை, நான் என்னவோ ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளில் சென்றுகொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை. சமயங்களில் எல்லாமே எனக்குப் புரிந்துவிட்டதுபோல்