பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

மக்சீம் கார்க்கி


அனுபவிக்க இயலவில்லை, அவள் சொக்கிப்போன கண்களோடு நிகலாயைப் பார்த்தாள். நிகலாய் அவள் உட்கார்ந்திருந்த சோபாவின் இன்னொரு மூலையில் கால்களை இழுத்து மடக்கி உட்கார்ந்தான். தங்கமயமான குழல் கற்றையால் விளிம்பு கட்டப்பெற்றுச் சிறந்து விளங்கும் சோபியாவின் பக்கவாட்டு உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சூரிய ஒளி சோபியாவின் தலைமீதும் தோள் மீதும் படிந்து ஒளிர்ந்து. வாத்தியத்தின் ஸ்வரக் கட்டைகளின் மீது விளையாடும் அவளது விரல்களைத் தடவிக்கொடுப்பதற்காக நழுவி இறங்கியது. அந்த கீதம் விம்மிப் பெருகி அறை முழுதும் நிரம்பி ஒலித்தது. தாயின் உள்ளத்தைத் தன்னையறியாமல் தொட்டு ஒலிக்கத் தொடங்கியது.

என்ன காரணத்தினாலோ கடந்த காலத்தின் இருள் கிடங்கிலிருந்து ஒரு பெரும் வேதனை மறந்து மரத்துப் போன வேதனை மீண்டும் உயிர் பெற்றெழுந்து அவள் மனத்தில் புகுந்து உறுத்தி. மிகுந்த கசப்பைக் கொடுத்தது.

அந்தக் காலத்தில் ஒருநாள் அவளது கணவன் இரவில் அகால வேளையில் நன்றாகக் குடித்துத் தீர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தான், அவளைத் தன் கரத்தால் இறுகப் பிடித்து, படுக்கையினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளி ஒரு உதை கொடுத்துவிட்டுப் பேசினான்:

“இங்கிருந்து போய்விடு. நாயே! உன்னைக் கண்டாலே எனக்கு எரிச்சலாய் வருகிறது!”

அவனது அடிகளிலிருந்து தப்பிப்பதற்காக. அவள் தனது இரண்டு வயதான மகனைப் பற்றியெடுத்து, முழுங்காலிட்டிருந்த தன் உடம்புக்கு முன்னால் அவனை ஒரு கேடயம் மாதிரி நிறுத்திக்கொண்டாள். அந்தக் குழந்தை, பயந்து போயிருந்த அந்த அம்மணமான குழந்தை, அலறிக் கூச்சலிட்டது. அவள் கைக்குள் அடங்காமல் திமிறியது..

“போ வெளியே!’ என்று கர்ஜித்தான் மிகயீல்.

அவள் துள்ளியெழுந்து, சமையல் கட்டுக்குள் ஓடி ரவிக்கையைத் தோள்மீது தூக்கிப்போட்டுக்கொண்டு குழந்தையையும் ஒரு துணியில் சுற்றியெடுத்துக்கொண்டு, வாய் பேசாது முனங்காது படுக்கப்போவதற்கு முன் போட்டிருந்த ஆடையுடனேயே தெருவுக்கு வந்தாள். அப்போது மே மாதம், அன்றிரவு குளிர் மிகவும் விறைத்து நடுக்கியது. தெருப்புழுதி அவளது பாதங்களில் அப்பிக்கொண்டு குளிர்ந்து விறைத்தது. பெருவிரல்களில் ஒட்டிக்கொண்டது குழந்தை அலறித்துடித்துக் கொண்டிருந்தது. அவள் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு பயமடித்துப் போய் தெரு வழியே விறுவிறுவென