பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

281


மறைந்தன. மீண்டும் ஒரு உரத்த உக்கிரமான கூச்சல் நாதம் எழுந்து, மற்ற குரல்களையெல்லாம் மூழ்கடித்து ஒலித்தது. இதன் பின்னர், ஏதோ ஒரு பெருந்துயர ஒலி விம்மியது. எனினும் அந்தத் துயர ஒலி அனுதாபத்தைவிட ஆத்திரத்தைத்தான் அதிகம் கிளப்பியது. பிறகு ஒரு வலிமைமிக்க இனிய நாதம் ஒலித்துப் பெருகியது. அந்த ஒலியில் கவர்ச்சியும் பிடிப்பும் இருந்தன.

அவர்களிடம் இனிய வார்த்தைகள் புகலவேண்டும் என்ற ஆசை தாயின் உள்ளத்தில் நிரம்பித் ததும்பியது. அந்தச் சங்கீதத்தால் அவள் கிறுகிறுத்துப் போயிருந்தாள். அந்தச் சகோதர சகோதரி இருவருக்கும் தன்னால் உதவ முடியும் என்ற எண்ணம் தோன்றவே அவள் லேசாகப் புன்னகை செய்துகொண்டாள்.

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்-அவளால் என்னதான் செய்ய முடியும்? அவள் அமைதியாக எழுந்து சமையலறைக்குள்ளே சென்று தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்தாள்.

ஆனால் இந்த ஒரு செய்கை மட்டும் அவளுக்கு அவர்கள் மீதிருந்த ஆர்வத்தைத் திருப்திப்படுத்திவிடவில்லை. அவள் தேநீரைக் கோப்பைகளில் ஊற்றும்போதே ஏதோ கசந்து போய் சிரித்துக்கொண்டே சொன்னாள். அவர்களை ஆசுவாசப்படுத்துவற்கென்றும், அதேபோலத் தன் இதயத்துக்குச் சமாதானம் சொல்வது போலவும் அவ்வார்த்தைகளை அவள் சொன்னாள்;

“நாமெல்லாம், அந்த இருண்ட வாழ்விலிருந்து வந்த நாமெல்லாம், எல்லாவற்றையும் உணரத்தான் செய்கிறோம். ஆனால், நமது உணர்ச்சிகளை நம்மால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. நமக்கு வெட்க உணர்ச்சி தோன்றுகிறது. ஏனெனில் நமக்குப் புரிந்த விஷயத்தையே நம்மால் சொல்ல முடியவில்லையே! அடிக்கடி–நமது வெட்க உணர்ச்சியால் — நாம் நமது சொந்த எண்ணங்களின் மீதே எரிந்து விழுகிறோம். வாழ்க்கை நம்மைச் சகல கோணங்களிலிருந்தும் தாக்குகிறது. நாமோ ஓய்ந்திருக்க எண்ணுகிறோம். நமது சிந்தனைகளோ நம்மை அப்படியிருக்க விடுவதில்லை.”

நிகலாய் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துவிட்டுக்கொண்டே அவள் கூறியதைக் கேட்டான்; சோபியா தனது அகன்ற கண்களைத் திறந்தபடியே புகை பிடிக்கவும் மறந்து போய் இருந்தாள். சிகரெட் கூட அணைந்துவிடும் போலிருந்தது. அவள் இன்னும் அந்தப் பியானோ வாத்தியத்தின் முன்புதான் இருந்தாள். தன் சகோதரனை நோக்கிச் சிறிது திரும்பியிருந்தாள். எனினும் தனது வலது கையால் பியானோவின் கட்டைகளை சமயங்களில் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். தாய் தனது