பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

285


பெலகேயா சோபியாவின் கரத்தைத் தனது இரு கரத்தாலும் பற்றிப் பிசைந்துகொண்டே சொன்னாள்:

“மிகுந்த நன்றி.”

4

சில தினங்கள் கழிந்தபின், ஒரு நாள் தாயும் சோபியாவும் ஏழை நாடோடிப் பெண்களைப்போல் உடை தரித்தவாறு நிகலாவின் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் இருவரும் நைந்து போன கவுன்களும் ரவிக்கைகளும் அணிந்திருந்தார்கள்.. முதுகில் ஆளுக்கொரு சாக்குப் பையைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்கள், ஒவ்வொருவர் கையிலும் கம்பு இருந்தது. அந்த உடையலங்காரம் சோபியாவை ஓரளவு குள்ளமாக எடுத்துக்காட்டியது. அவளது வெளுத்த முகத்தை மேலும் கடுமையாகக் காட்டியது.

நிகலாய் தனது சகோதரிக்கு விடை கொடுக்கும்போது அவளது கரத்தை ஆர்வத்தோடு குலுக்கினான் அவர்களிருவருக்குமிடையே நிலவிய அமைதியான எளிமையான ஒட்டுறவைத் தாய் மீண்டும் ஒருமுறை உணர்ந்தாள், அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடவில்லை. அன்பு ததும்ப அழைக்கவில்லை. என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த பரிவோடும் ஆர்வத்தோடும் தம் உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டார்கள். அவள் குடிவாழ்ந்த இடத்தில் ஜனங்கள் முத்தமிடவும் செய்தார்கள், அன்போடு அழைக்கவும் செய்தார்கள். ஆனால் ஒருவரையொருவர் பசி வெறிகொண்ட பட்டி நாய்களைப்போல் கடித்துக் குதறவும் செய்தார்கள்.


பெண்கள் மௌனமாய் நகரத்தின் வீதிகளின் வழியே, வயற் புறங்களின் வழியே நடந்து சென்றார்கள், இருபுறத்திலும் பெரிய பெரிய பிர்ச் மரங்கள் வளர்ந்தோங்கி நிற்க, சமதளமற்று மேடுபள்ளமாயிருக்கும் அகன்ற பாதையின் வழியாக, தோளோடு தோள் உரச, ஒருவர் பக்கம் ஒருவராக நடந்துசென்றார்கள்.

“உங்களுக்கு களைப்பே தோன்றவில்லையா” என்று சோபியாவைப் பார்த்துக் கேட்டாள் தாய்.

“எனக்கு அதிகமாக நடந்து பழக்கமிராது என்று நினைக்கிறீர்களா? இதெல்லாம் எனக்குப் பழகிப்போன விவகாரம்.”

சோபியா உற்சாகத்தோடு தனது பிள்ளைப் பிராயத்தின் செல்ல விளையாட்டுக்களை நினைவு கூர்வதைப்போல, தனது புரட்சி நடவடிக்கைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவள் பொய்யான