பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

287


மற்றொரு முறை அவள் ஒரு கன்னியாஸ்திரி மாதிரி வேடமிட்டுக்கொண்டு, அவளைத் தொடர்ந்து திரியும் ஒரு உளவாளி சென்ற அதே ரயிலில், அவனுக்குப் பக்கத்துச் சீட்டிலேயே பிரயாணம் செய்தாள். தான் மோப்பம் பிடித்து வரும் பெண்ணை எவ்வளவு கெட்டிக்காரத்தனமாகப் பின் தொடர்ந்து வருகிறான் என்பதை அவளிடமே” அவன் பெருமையோடு பீற்றிக்கொண்டான். அந்த உளவாளி அவள் அதே ரயிலில் இரண்டாவது வகுப்பில் பிரயாணம். செய்து வருவதாக அவளிடமே தெரிவித்தான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அவன் கீழே இறங்கிச் சென்று அவள் இருக்கின்ற பெட்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி வந்து அந்தக் கன்னியாஸ்திரியிடம் சொன்னான் அவளை இப்போது காணவில்லை.

“ஒருவேளை படுத்துத் தூங்கியிருப்பாள், அவளுக்கு ஒரே களைப்பாயிருந்திருக்கும், நமது வாழ்க்கையையெல்லாம்விட, அவளுடைய வாழ்க்கை சிரமமானதுதானே!”

சோபியாவை அன்பு ததும்பப் பார்த்தவாறே அந்தக் கதைகளைக் கேட்டு, தாய் தனக்குள் சிரித்துக்கொண்டாள், நெட்டையாகவும் ஒல்லியாகவுமிருந்த சோபியா தனது அழகிய கால்களை லாவகமாக எட்டி வீசி நடந்தாள். அவளது பேச்சிலும் நடையின் வீச்சிலும், அவளது உற்சாகம் நிறைந்த கம்மலான குரலிலும், அவளது நிமிர்ந்த தோற்றம் முழுவதிலுமே ஒரு துணிவும் முழுமையான ஆரோக்கியமும் நிறைந்திருப்பதாகத் தோன்றியது. அவள் எதையுமே ஒரு வாலிபமிடுக்கோடுதான் நோக்கினாள்; எங்கெங்கு நோக்கினும். அவள் தன் இதயத்துக்கு மகிழ்வூட்டும் எதையோதான் கண்டாள்.

“எவ்வளவு அழகான பைன்மரம்!” என்று ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு கூவினாள் சோபியா. தாய் உடனே நின்று அந்த மரத்தைப் பார்த்தாள்–அந்தப் பைன் மரமும் மற்ற மரங்களைப்போலத்தான் அவளுக்குத் தோன்றியது. அவளுக்கு அதில் எந்தவித அழகோ புதுமையோ தோன்றவில்லை.

“ஆமாம் அது ஒரு அழகான மரம்தான்” என்று கூறிக்கொண்டே அவள் சிரித்துக்கொண்டாள். சோபியாவின் காதருகே உள்ள நரை முடிகளில் காற்று எப்படி ஊசலாடித் திரிகிறது என்பதைப் பார்த்தாள்.

“அதோ ஒரு வானம்பாடி!” என்றாள் சோபியா, சோபியாவின் சாம்பல் நிறக் கண்கள் அன்பு ததும்பி ஒளிபெற்று விளங்கின, அவளது உடல் முழுவதுமே நிர்மலமான வான மண்டலத்தில் எங்கேயோயிருந்து கேட்கும் ஏதோ ஒரு அரூபியான கீதத்தைக் கேட்க எண்ணித் துடித்தது.