பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

மக்சீம் கார்க்கி


சமயங்களில் அவளது அழகிய உடல், ஒரு காட்டு மலரைக் கொய்வதற்காகக் குனிந்து வளையும்; வாய்க்குள்ளாக ஏதோ ஒரு இசையை முணுமுணுத்துக்கொண்டே அவள் அந்த மலரைத் தனது மெல்லிய விரல்களால் விருட்டென்று பறித்தெடுப்பாள், நடுங்கும் அந்தப் பூவின் இதழ்களை இனிமையாய்த் தடவுவாள்.

இவையெல்லாம் சாம்பல் நிற கண்களையுடைய சோபியாவின் மீது தாய்க்கு ஒரு ஈடுபாட்டை உண்டாக்கியது; எனவே அவளோடு சேர்ந்து நடப்பதற்காக, தாய் அவளுக்கு மிகவும் அருகில் நெருங்கியவாறு நடந்த சென்றாள், சில சமயங்களில் சோபியா கடுமையாகவும் பேசினாள். தாய்க்கு அப்படிப் பேசுவது பிடிக்காது; எனவே அப்போது அவள் தனக்குத்தானே நினைத்துக்கொள்வாள்:

“மிகயீலுக்கு இவளைப் பிடிக்காது.”

ஆனால் மறுகணமே சோபியா மீண்டும் அன்போடும் எளிமையோடும் பேசுவாள்; தாயும் அவளை ஒரு புன்னகையோடு பார்த்துக்கொள்வாள்.

“நீங்கள் இன்னும் எவ்வளவு இளமையோடிருக்கிறீர்கள்?” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே!” என்றாள் சோபியா.

பெலகேயா புன்னகை செய்தாள்:

“நான் அதைச் சொல்லவில்லை. முகத்தைப் பார்த்தால், உங்கள் வயது நீங்கள் சொன்னதைவிடவும் அதிகமாகத்தான் தெரிகிறது. ஆனால், உங்கள் பேச்சைக் கேட்டால், கண்களைப் பார்த்தால் எனக்கு ஒரே வியப்பாயிருக்கிறது — நீங்கள் ஒரு சின்னஞ்சிறு பெண் போலவே இருக்கிறீர்கள். எவ்வளவோ கஷ்டமும் அபாயமும் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறீர்கள். இருந்தாலும் இதயம் மட்டும் எப்போதும் சிரித்த வண்ணமாகவே இருக்கிறது.”

“எனக்கு என்னுடைய கஷ்டங்கள் எப்போதுமே தெரிவதில்லை. என்னுடைய வாழ்க்கையைவிட, ருசிகரமும் சிறப்பும் மிக்க வாழ்க்கை வேறு ஒன்றிருக்க முடியும் என்றே எனக்குத் தோன்றுவதில்லை. நான் உங்களை உங்கள் தந்தைவழிப் பெயரால்—நீலவ்னா என்றே அழைக்கிறேனே! பெலகேயா என்ற பெயர் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.”

‘நீங்கள் என்னை எப்படி அழைத்தாலும் எனக்குச் சம்மதம்தான்” என்று ஏதோ யோசித்தவாறே சொன்னாள் தாய். “உங்கள் இஷ்டம் போலவே வைத்துக்கொள்ளுங்கள், நான் உங்களையே பார்க்கிறேன்: