பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

291


“தம்பி மிகயீல்! சௌக்கியமா?” என்று தூரத்திலிருந்தவாறே கூறினாள் தாய்.

அவன் தன்னிடத்தை விட்டு எழுந்து அவர்களை நோக்கி நிதானமாக நடந்து வந்தான். தாயை அடையாளம் கண்டுகொண்டவுடன் அவன் சட்டென நின்று, புன்னகை புரிந்தவாறே தனது கரிய கரத்தால் தன் தாடியை வருடிவிட்டுக்கொண்டான்.

“நாங்கள் பிரார்த்தனைக்குப் போகிற போக்கில்” என்று கூறிக்கொண்டே முன்வந்தாள் தாய். “போகிற வழியில் என் சகோதரனைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்று நினைத்தேன். இவள் என் தோழி ஆன்னா.”

தன்னுடைய குயுக்தியைக் கண்டு தானே பெருமைப்பட்டவளாய், தாய் ஓரக்கண்ணிட்டு சோபியாவின் கண்டிப்பும், ஆழ்ந்த உணர்வும் நிறைந்த முகத்தைப் பார்த்தாள்.

“வணக்கம்!” என்று ஒரு வறண்ட புன்னகையோடு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான் ரீபின்; சோபியாவுக்கு வணக்கம் செலுத்தினான். “பொய் சொல்லாதே, நீ இப்போது ஒன்றும் நகர்ப்புறத்தில் இல்லை. இங்கு நீ எந்தப் பொய்யுமே சொல்லத் தேவையில்லை, எல்லோரும் நம்மவர்கள்.”

தானிருந்த இடத்திலிருந்தே எபீம் அந்த யாத்திரிகர்களைக் கூர்ந்து பார்த்தான், பிறகு தன் பக்கத்திலிருந்த தோழர்களிடம் இரகசியமாக ஏதோ சொன்னான். அந்தப் பெண்கள் இருவரும் அருகே நெருங்கி வந்தவுடன் அவன் தன்னிடத்தைவிட்டு எழுந்து, அவர்களுக்கு மௌனமாக வணக்கம் செலுத்தினான். அவனது சகாக்கள் அந்த விருந்தாளிகள் வந்ததையே கவனிக்காதவர்கள் மாதிரி அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள்.

“நாங்கள் இங்கே பாதிரியார்கள் மாதிரி வாழ்கிறோம்” என்று சொல்லிக்கொண்டே பெலகேயாவின் தோளில் லேசாகத் தட்டினான் பின். “யாருமே எங்களைப் பார்க்க வருவதில்லை. முதலாளி அயலூருக்குப் போயிருக்கிறார், அவர் மனைவி ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாள். அதனாலே அநேகமாக இங்கே எல்லாம் என் மேற்பார்வைதான். சரி, உட்காருங்கள். ஏதாவது சாப்பிட விரும்புவீர்கள், இல்லையா? எபீம்! நீ போய் கொஞ்சம் பால் கொண்டுவா.”

எபீம் அந்தக் குடிசைக்குள்ளே நுழைந்தான், அந்த யாத்திரிகர்கள் தங்கள் முதுகில் தொங்கிய பைகளைக் கீழே இறக்கினார்கள். நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்து.