பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

மக்சீம் கார்க்கி


மூட்டையை இறக்கி வைப்பதற்கு உதவிசெய்தான், உருண்டு திரண்டு பறட்டைத் தலையுடன் அவனது தோழன் ஒருவன் மேஜையின் மீது முழங்கைகளை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்தான்; தனது தலையைச் சொறிந்துகொண்டும், ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டும் அவன் அவர்களைக் கூர்ந்து பார்த்தவாறே ஏதோ சிந்தித்தான்.

தார் எண்ணெயின் கார நெடியும், அழுகிப்போன இலைக் குவியல்களின் நாற்றமும் சேர்ந்து அந்தப் பெண்களின் புலன்களைக் கிறக்கின.

“அவன் பேர் யாகல்” என்று அந்த நெட்டை வாலிபனைச் சுட்டிக்கொண்டே சொன்னான் ரீபின்; “அடுத்தவன் பெயர் இக்நாத், சரி, மகன் எப்படி இருக்கிறான்?”

“சிறையிலிருக்கிறான்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“மறுபடியுமா?” என்றான் ரீபின்: “அவனுக்குச் சிறைபிடித்துப் போயிற்று போலிருக்கிறது.”

இக்நாத் பாடுவதை நிறுத்தினான்; யாகவ் தாயின் கையிலிருந்து கைத்தடியை வாங்கிக்கொண்டே சொன்னான்;

“உட்காருங்கள், அம்மா”

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்கள்” என்று சோபியாவைப் பார்த்துச் சொன்னான் ரீபின். ஒன்றும் பேசாமல் அவள் ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து ரீபினையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அவனை அவர்கள் எப்போதும் கைது செய்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே தாய் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிராக உட்கார்ந்து தலையை ஆட்டினான் ரீபின். “நீலவ்னா, உனக்கு அதிருஷ்டமே கிடையாது.”

“ஆமாம், எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது.”

“பழகிப்போய்விட்டதா?”

“இல்லை. எனக்கு அது ஒன்றும் பழகிப் போய்விடவில்லை. ஆனால், அதைவிட்டால் எனக்கு வேறு கதி இல்லை.”

“ஹும்!” என்றான் ரீபின்; “நல்லது அதைப்பற்றி எங்களுக்குச் சொல்லேன்.”

எபீம் ஒரு ஜாடியில் பால்கொண்டு வந்தான்; மேஜை மீதிருந்த கோப்பையை எடுத்து அதை அலம்பிவிட்டு அதில் பாலை ஊற்றினான். பிறகு தாய் கூறிக்கொண்டிருக்கும் கதையையும் அவன் காதில் வாங்கிக்கொண்டே அந்தப் பால் கோப்பையை சோபியாவிடம்