பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

மக்சீம் கார்க்கி


நிற்கும் மஞ்சள் நிற ரோமங்கள் தெரிந்தன. அவனது மஞ்சள் பாரித்த ஒட்டிய முகத்தில் மெல்லிய தாடி அழகு செய்து கொண்டிருந்தது. அவனது உதடுகள் நிரந்தரமாகத் திறந்து காணப்பட்டன. அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜுரத்தில் பிரகாசித்தன.

“நீங்கள் புத்தகங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்று ரீபின் சோபியாவை அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் சொன்னான்.

“ஆமாம்” என்றாள் அவள்.

“ரொம்ப நன்றி—எல்லா மக்களின் சார்பாகவும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு அது தெரியும். எனவே அவர்கள் சார்பில் நான் நன்றி கூறுகிறேன்.”

அவன் பரபரவென்று சுவாசித்தான்; அவனது சுவாசம் ஆசுவாசமின்றி ஆழமின்றிப் பதைபதைப்போடு இயங்கியது. அவனது குரல் அடிக்கடி தடைப்பட்டது. பலமற்ற கரங்களின் எலும்பு விரல்கள் கோட்டுப் பித்தான்களை மாட்டுவதற்காக நெஞ்சுத் தடத்தில் தடுமாறித் தடவின.

“இந்த நேரத்தில் நீங்கள் காட்டுப் பக்கம் வருவது உங்கள் உடல் நிலைக்கு நல்லதல்ல. காட்டில் ஈரமாயும் புழுக்கமாயும் இருக்கிறது.” என்றாள் சோபியா.

“எனக்கு இனி எதுவுமே நல்லதல்ல” என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு சொன்னான் அவன். “சாவு ஒன்றுதான் இனி எனக்கு நல்லது!”

அவனது குரலைக் கேட்டாலே நெஞ்சில் வேதனை உண்டாயிற்று: அவனது தோற்றம் முழுவதும் ஓர் அதீதமான அனுதாப உணர்ச்சியையே கிளறிவிட்டது. அந்த அனுதாப உணர்ச்சியால் எந்தப் பலனும் இல்லாததோடு, வெறும் கசப்புணர்ச்சியே மிஞ்சி நிற்கும் என்பது தெரிந்திருந்தும்கூட, அனுதாபம் உண்டாகத்தான் செய்தது. அவன் ஒரு பீப்பாயின் மீது அமர்ந்து தனது முழங்கால்களை மிகவும் நிதான்மாக மடக்கினான்; அந்தக் கால்களை ஒடிந்துவிடாதபடி பதனமாக மடக்குவது மாதிரி இருந்தது அவனது செய்கை. வியர்த்திருந்த நெற்றியைத் துடைத்தான். அவன் முடியோ சருகுபோல உயிரற்றிருந்தது.

நெருப்புப் பற்றியெரிந்தது. சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் அசைந்தாடும்படியாக அனல் அடித்தது. காட்டுக்குள் இருள் கவிந்து