பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

305


நிழலாடியது. நெருப்புக்கு மேலாக, உப்பிய கன்னங்களோடு விளங்கும் இக்நாத்தின் உருண்ட முகம் பிரகாசித்தது. நெருப்பு மீண்டும் அணைந்துவிட்டது. புகை நாற்றம் மண்டியது. மீண்டும் இருளும் அமைதியும் நிலவியது: எனவே அந்த நோயாளி மனிதனின் கரகரத்த குரலை அப்போது தெளிவாகக் கேட்க முடிந்தது.

“நான் இன்னும் சாதாரண மக்களுக்கு உதவ முடியும். ஒரு பெரிய குற்றத்தின் உயிருள்ள ஞாபகச் சின்னமாக நான் விளங்க முடியும்.... இங்கே, என்னைப்பாருங்கள்.... இருபத்தெட்டு வயதிலேயே நான் செத்துக்கொண்டிருக்கிறேன். பத்து வருஷங்களுக்கு முன்னால், நான் ஐநூறு பவுண்டுக் கனமுள்ள சாமான்களைக்கூடக் கொஞ்சமும் முக்கி முனகாமல் சுமந்து சென்றுவிடுவேன். அந்த மாதிரியான உடல் வளம் மட்டும் இருந்திருந்தால், என்னால் எழுபது வயது வரை கூடச் சுலபமாக உயிர்வாழ முடியும் என நான் நினைத்தேன். ஆனால், நானோ மேற்கொண்டு பத்தே பத்து வருஷங்கள்தான் உயிர்வாழ முடிந்தது. இப்போதோ — இதுதான் என் அந்திம காலம். என்னுடைய முதலாளிகள் என்னைச் சுரண்டிக் கொள்ளையிட்டுவிட்டார்கள். என்னுடைய வாழ் நாளின் நாற்பது வருஷ காலத்தை. நாற்பது வருஷ வாழ்வையே அவர்கள் பறித்துக்கொண்டுவிட்டார்கள்!”

“இதுதான் அவன் பாடுகிற பாட்டு!” என்றான் ரீபின்.

மீண்டும் நெருப்புப் பற்றிக்கொண்டு முன்னைவிடப் பிரகாசமாகவும் பெரிதாகவும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அங்கு சூழ்ந்து நின்ற இருள் தோப்பைப் பார்க்க விலகியோடியது; மீண்டும் அந்த நெருப்பை நெருங்கி வந்து ஊமையாக, வெறுப்போடு நடமிட்டு அசைந்தாடத் தொடங்கியது. ஈரவிறகு இரைச்சலோடு வெடித்தது. வெது வெதுப்பான காற்று வீசியபோது மரத்திலைகள் சலசலத்தன. சிவப்பும் மஞ்சளும் கலந்த தீ நாக்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி உற்சாகமாக விளையாடின; அவை மேலோங்கி எரியும்போது தீப்பொறிகள் உதிர்ந்து பொறிந்தன. நெருப்புக்கனலும் ஒரு தீச்சருகும் பறந்து சென்று அணைந்து செத்தன. வானத்துத் தாரகைகள் பூமியை நோக்கிப் புன்னகை பூத்தன; அந்தத் தீப்பொறிகளைத் தமது நட்சத்திர மண்டலத்துக்குக் கவர்ந்திழுக்க முயன்றன.

“இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது. எத்தனை மக்கள் தங்களது உழைப்பினால் முடமாகிறார்கள், எத்தனைபேர் வாய் பேசாது பட்டினிச் சாபு சாகிறார்கள்......” அவன். மீண்டும் இருமலினால் குனிந்து குலுங்கினான்.