பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

307


போய்விட்டது. அதற்காகத்தான் நான் என் வாழ்க்கையைப் பறிகொடுத்தேன். என்னை வேலையைக் கொடுத்தே கொன்றுவிட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்குத் தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கிகொடுத்தான்!”

“கடவுளின் அம்சமாகவும் கடவுளின் பிம்பமாகவும்தான் மனிதன் பிறந்தானாம்! அந்த உருவத்துக்கு அவர்கள் செய்த உபகாரத்தைப் பார்த்தீர்களா?” என்று கசந்துபோய்ச் சொன்னான் எபீம்.

“பின்னே. சும்மா இராதே!” என்று தன் கையை மேஜைமீது தட்டி அறைந்துகொண்டே சொன்னான் ரீபின்.

“அத்துடன் நிறுத்திவிடாதே” என்றான் யாகவ்.

இக்நாத். ஒரு சிரிப்புச்சிரித்தான். ரீபின் எப்போதெப்போது பேசினாலும் அடங்காத அகோரப்பசிகொண்ட மனிதனின் பரபரப்போடு அந்த மூன்று இளைஞர்களும் அவனது பேச்சைக் காதுகொடுத்துக் கேட்கத் துடிப்பதைத் தாய் கண்டறிந்தாள். சவேலியின் பேச்சு அவர்களது முகத்தில் ஒரு விசித்திரமான ஏளன பாவத்தைப் படரச் செய்தது. அந்த பாவம் துல்லியமாகவும் வெளியே தெரிந்தது; அந்த நோயாளிக்காக அவர்கள் கொஞ்சம்கூட அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.

“அவன் சொல்வதெல்லாம் உண்மைதானா?” என்று சோபியாவின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு மெதுவாகக் கேட்டாள் தாய்.

“ஆமாம் உண்மைதான்” என்று உரத்த குரலில் பதில் சொன்னாள் சோபியா. “இந்த மாதிரி விஷயங்களைப்பற்றி மாஸ்கோ பத்திரிகைகளில்கூட எழுதினார்கள்.”

“ஆனால் குற்றவாளிதான். தண்டிக்கப்படவே இல்லை!” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் ரீபின். “அவனைத் தண்டித்தே இருக்க வேண்டும். அவனை ஜனங்களுக்கு மத்தியில் உருட்டித் தள்ளி, கண்டம் கண்டமாக, துண்டம் துண்டமாக வெட்டித் தறித்து. அவனது அழுகிப்போன மாமிசத்தை நாய்களுக்கு விட்டெறிந்திருக்க வேண்டும்! ஜனங்கள் மட்டும் விழித்தெழுந்துவிட்டால், அவர்கள் கொடுக்கின்ற தண்டனை மகாப்பெரிய தண்டனையாகவே இருக்கும், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கழுவுவதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தத்தைச் சிந்தித் தீர்ப்பார்கள்! அந்த ரத்தம் அவர்களது சொந்த ரத்தம்தான்! அவர்களது ரத்தக் குழாயிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கப்பட்ட ரத்தம்தான்! எனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை அகற்றுவதற்காக பெருமளவு ரத்தம் சிந்துகிறார்கள்.