பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

மக்சீம் கார்க்கி


"குளிருகிறது” என்றான் அந்த நோயாளி.

அவனை எழுந்திருக்கச் செய்து நெருப்பருகே கொண்டுபோய் உட்கார வைட்பதற்கு யாகவ் உதவி செய்தான்.

இப்போது நெருப்பு பிரகாசமாக எரிந்தது: உருவமற்ற நிழல்கள் அதற்கு மேலாக நடுங்கியாடிக்கொண்டே, தீ நாக்குகளின் உற்சாகம் நிறைந்த விளையாட்டை வியந்து நோக்கிக்கொண்டிருந்தன. சவேலி ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து, மெலிந்து வெளுத்துப்போன தனது கரங்களை நெருப்பு வெக்கையை நோக்கி நீட்டினான். ரீபின் அவனை நோக்கித் தலையை அசைத்துவிட்டு, சோபியாவிடம் பேசத் தொடங்கினான்:

“இவன் புத்தகங்களைவிட, தெளிவாகக் கூறிவிட்டான். ஒரு யந்திரம் ஒரு தொழிலாளியைக் கொன்றால், அல்லது அவனது கையைத் துண்டாக்கி, அவனை முடமாக்கினால், அது அவன் குற்றம்தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு மனிதனின் ரத்தத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக உறிஞ்சித் தீர்த்து, அவனைக் குப்பைத் தொட்டியில் எறியும் சக்கைபோல விட்டெறிந்தால், அதற்கு மட்டும் விளக்கமே கிடையாதாம்! ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும்தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள்? அவர்கள் ஏன் நம்மையெல்லாம் வாட்டி வதைபுரிகிறார்கள்? அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு: தாங்கள் விரும்புவதையெல்லாம் மனிதத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கு; பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை, தங்கத் தட்டுகளை, தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத்தான்! ‘நீ பாட்டுக்கு வேலையைச் செய்; கொஞ்சம் சிரமப்பட்டு வேலையைச் செய்; அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்; மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி மூத்திரம் பெய்வதற்குத் தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும்! என்கிறார்கள் அவர்கள்!”

தாய் கவனித்துக் கேட்டாள். அவளது கண் முன்னால், அந்த இரவின் இருளுக்கு ஊடே, தனது மகன் பாவெலும் அவனது தோழர்களும் தேர்ந்தெடுத்துள்ள புனித மார்க்கம் பிர்காசமாக ஒளிவிட்டுத் தெரிந்தது.