பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

309


சாப்பாடு முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்துகொண்டார்கள். தீ நாக்குகள் விறகுக் கட்டைகளைப் பேராசையோடு நக்கிக்கொடுத்தன. அவர்களுக்குப் பின்னால் இருள் திரைபோலத் தொங்கி, வானத்தையும் தோப்பையும் மறைத்து நின்றது. அந்த நோயாளி தனது அகன்று விரிந்த கண்களால் நெருப்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இடைவிடாது இருமினான்; அவனது உடம்பே குலுங்கியது. நோயினால் பாழ்பட்டுப்போன உடம்பிலிருந்து அவனது வாழ்வின் மிச்ச சொச்சங்கள் அனைத்தும் பொறுமையிழந்து விடுபெற முயன்று போராடுவதுபோல இருந்தது. நெருப்பின் ஒளி அவனது முகத்தில் விளையாடியது; எனினும் அவனது உயிர்ப்பற்ற சருமத்தில் அந்த ஒளி எந்த உணர்ச்சியையும் உருவேற்ற இயலவில்லை. அவனது கண்கள் மட்டும் அணையப்போகும் நெருப்பைப் போல் பிரகாசித்தன.

“சவேலி, நீ உள்ளே போய்ப் படுத்துக்கொள்வது நல்லது” என்று அவன் பக்கமாகச் சாய்ந்தவாறு சொன்னான் யாகவ்.

“ஏன்?” என்று அந்த நோயாளி சிரமத்தோடு கேட்டான். “நான் இங்கேயே இருக்கிறேன், மனிதர்களோடு இருப்பதற்கு எனக்கு அதிக காலமில்லை.”

அவன் தன்னைச் சுற்றிலும் பார்த்தான்; சிறிது நேரம் கழித்து வெளுத்துப்போன புன்னகையுடன் பேசினான்:

“உங்களோடு இருப்பதே எனக்கு நல்லது. உங்களைப் பார்க்கும்போது, பேராசையின் காரணமாகக் கொல்லப் பட்டவர்களுக்காக. கொள்ளையிடப்பட்டவர்களுக்காக நீங்கள் பழிக்குப்பழி வாங்குவீர்கள், வஞ்சம் தீர்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.” அவனுக்கு யாருமே பதில் சொல்லவில்லை. அவனது தலை பலமற்றுச் சோர்ந்து மார்பின் மீது சரிந்தது; சீக்கிரமே அவன் தூங்கிப்போய்விட்டான். ரீபின் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகச் சொன்னான்:

“இவன் எப்போதும் இங்கே வந்து உட்கார்ந்து இதையே. இந்த மனிதனின் ஏமாற்றத்தைப் பற்றியே பேசுவான். அவனது இதயம் முழுவதிலும் இந்த ஏமாற்றம்தான் நிரம்பியிருக்கின்றது. அந்த உணர்ச்சி அவனது கண்களையே திரையிட்டுக் கட்டிவிட்ட மாதிரி அவனுக்குத் தோன்றுகிறது; அதைத் தவிர வேறு எதையுமே அவன் பார்ப்பதில்லை; உணர்வதில்லை.”

அவன் வேறு என்னத்தைத்தான் பார்க்க வேண்டும்?” என்று ஏதோ சிந்தித்தவளாய்க் கேட்டாள் தாய். “தங்களது முதலாளிகள்,