பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

மக்சீம் கார்க்கி


மானாங்காணியாகவும் துராக்கிரமமாகவும் பணத்தைச் செல்விட்டுக் கொண்டிருப்பதற்காக, தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் உழைத்து உழைத்து, அந்த உழைப்பினாலேயே கொல்லப்பட்டுச் சாகிறார்கள் என்றால், இதைவிட உனக்கு வேறு என்ன விஷயம்தான் வேண்டும் என்கிறாய்?”

“ஆனால் இவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பது எரிச்சலாயிருக்கிறது” என்றான் இக்நாத், “இவன் பேச்சை ஒரு தடவை கேட்டுவிட்டாலே அதை மறக்க முடியாது: மறக்க முடியாத அதே விஷயத்தையே அவன் திருப்பித் திருப்பித் தினம் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறானே.”

“ஆனால், இந்த ஒரே விஷயத்தில் சகல விஷயங்களுமே. வாழ்க்கை முழுவதுமே அடங்கிப் பொதிந்திருக்கிறது!” என்று சோகத்தோடு கூறினான் ரீபின். “அதைப் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். நானும் இந்தக் கதையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இருந்தாலும்கூட, எனக்குச் சமயங்களில் சில சந்தேகங்கள்கூடத் தோன்றுவதுண்டு. பணக்காரர்களையும் ஏழைகளையும், - எல்லோரையுமே ஒரு மாதிரியாகவே எண்ணிப் பார்ப்பதற்கும், மனிதனது தீய குணங்களையும் முட்டாள்தனங்களையும் நம்பவிரும்பாதிருப்பதற்கும் சில சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். பணக்காரர்கள்கூடத் தம்மை மறந்து செல்ல முடியும்! சிலர் பசியால் குருடாகிப் போகிறார்கள், சிலர் தங்கத்தால் குருடாகிப் போகிறார்கள். அதுதான் சங்கதி! ‘ஓ மனிதர்களே, சகோதரர்களே! உதறியெழுந்து வாருங்கள், தன்னலம் கருதாது நேர்மையோடு சிந்தியுங்கள்’ என்று நினைக்கத் தோன்றும்.”

அந்த நோயாளி அசைந்து கொடுத்தான், கண்களைத் திறந்தான், பிறகு தரையில் படுத்துவிட்டான். யாகவ் வாய் பேசாது எழுந்திருந்து வீட்டிற்குள் சென்று ஒரு கம்பளிக்கோட்டைக் கொண்டுவந்து அந்த நோயாளியைப் போர்த்தி மூடினான், மீண்டும் சோபியாவுக்கு அருகில் சென்று உட்கார்ந்துகொண்டான்.

குதூகலம் நிறைந்து கும்மாளியிடும் நெருப்பு தன்னைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த கரிய உருவங்களை ஒளிரச் செய்தது. நெருப்பின் இரைச்சலோடும், வெடிக்கும் சத்தத்தோடும், அந்த மனிதர்களின் குரல்களும் சேர்ந்து கலந்து ஒலித்துக்கொண்டிருந்தன.

உயிர் வாழும் உரிமைக்காகச் சகல தேசத்திலுமுள்ள மக்கள் அனைவரும் நடத்துகின்ற போராட்டங்களைப் பற்றியும், ஜெர்மனி தேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றியும்.