பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

மக்சீம் கார்க்கி


நின்ற பல்வேறு நாட்டு மக்களினத்திலும் அவர்கள் தங்கள் தோழர்களைக் கண்டார்கள். சகல மக்கள் மீதும் உளப்பூர்வமாகத் தோன்றும் ஒரு புதிய பந்தபாச உணர்ச்சி சுடர்விட்டு எழுந்தது; உலகத்துக்கே ஒரு புதிய இதயம் - எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும், எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற தீராத ஆவலுணர்ச்சியால் துடிதுடிக்கும் ஒரு புதிய இதயம் —பிறந்துவிட்டது!

“சர்வ தேசங்களிலுமுள்ள சகல தொழிலாளர்களும் நிமிர்ந்து நின்று, “போதும் போதும்! இது போன்ற வாழ்க்கை இனி எமக்குத் தேவையில்லை’ என்று கோஷித்து விம்மும் காலம் ஒருநாள் வரத்தான் போகிறது!” என்று நிச்சய தீர்க்கத்தோடு கூறினாள் சோபியா. “தங்களது பேராசையின் பலத்தைத் தவிர, வேறு எந்தவிதமான நிஜ பலத்தையும் பெற்றிராத இன்றைய உலகின் ‘பலசாலிகள்’ அன்றைய தினத்தில் அழிக்கப்டுவார்கள். இந்த உலகம் அவர்களது காலடியைவிட்டு நழுவி மறையும். அவர்களுக்குத் தப்பிப் பிழைப்பதற்கு எந்த உதவியும், எந்த மார்க்கமும் இருக்கவே இருக்காது!”

“அவ்வாறு நேரப்போவது உறுதி!” என்று தலைதாழ்த்திச் சொன்னான் ரீபின். “நாம் மட்டும் நம்மிடமுள்ள சகலவற்றையும், நம்மையுமே கொடுக்க, தியாகம் செய்யத் தயாராயிருந்தால், நம்மால் செய்ய முடியாத காரியம் எதுவுமே இருக்க முடியாது!”

தாய் தன் புருவங்களை உயர்த்தி, உதடுகளிலே வியப்பு நிறைந்த ஆனந்தப் புன்னகை தவழ, அந்தப் பேச்சைக் கேட்டாள். இயற்கைக்கு முற்றும் பொருந்தாததுபோலத் தோன்றிய சோபியாவின் குணம்— எதையுமே அளவுக்கு மீறிய அநாயாசத்தோடு வெடுக்கென்று தூக்கியெறிந்து வெட்டிப் பேசுவதாகத் தோன்றிய அவளது குணம்— அவள் கூறிய ஆர்வமிக்க, தங்கு தடையற்ற கதையின் போக்கிலே அழிந்து மறைந்துபோய்விட்டது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். அன்றைய இரவின் அமைதியும், நெருப்பின் விளையாட்டும்; சோபியாவின் முகமும் அவளுக்குப் பிடித்துப்போய்விட்டன; ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்துப்போன விஷயம், அந்த முஜீக்குகள் அனைவரும் காட்டிய பரிபூரணமான ஈடுபாட்டு உணர்ச்சிதான்! அவர்கள் அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள். சர்வதேசங்களோடும் தங்களை இணைத்துப் பிணைக்கும் பட்டுக்கயிறு போன்ற அந்தக் கதை. இடையிலே அறுந்துவிடக்கூடாதே என்ற பயமும் அந்த இடையறாத கதையின் போக்குத் தடைப்பட்டு நின்றுவிடக் கூடாதே என்ற அங்கலாய்ப்புமே அவர்களை அப்படி அசையாதிருக்கச் செய்தன, இடையில் மட்டும் அவர்களில் யாராவது ஒருவன் எழுந்திருந்து