பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மக்சீம் கார்க்கி


“பாஷா! [1] உனக்கு என்ன, உடம்பு சரியில்லையா?” என்று சமயங்களில் அவனை அவள் கேட்டாள்.

“இல்லையே சரியாகத்தானே இருக்கிறேன்.” என்று அவன் பதில் சொன்னான்.

“நீ மிகவும் மெலிந்துவிட்டாய்!” என்று கூறி அவள் பெருமூச்சுவிடுவாள்.

அவன் வீட்டுக்குப் புத்தகங்கள் கொண்டுவர ஆரம்பித்தான். அவற்றை இரகசியமாகப் படிப்பான்; படித்து முடித்ததும் அவற்றை ஒளித்து வைத்துவிடுவான். சமயங்களில் அந்தப் புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை நகல் செய்து கொள்வான்; அந்த நகலையும் ஒளித்து வைத்துவிடுவான்.

தாயும் மகனும் அநேகமாகப் பேசுவதே இல்லை; அதிகமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதும் இல்லை. காலையில் அவன் வாய் பேசாமல் தேநீர் அருந்திவிட்டு வேலைக்குப் போவான். மத்தியானத்தில் அவன் சாப்பிடுவதற்காகத் திரும்பி வருவான். அப்போதும் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதுவும் பேசிக்கொள்வதில்லை. மாலைவரை அவன் மீண்டும் எங்கேயோ போய் விடுவான். மாலையில் சீராய்க் குளித்துவிட்டு தனது புத்தகங்களை நீண்ட நேரம் படிப்பான். பண்டிகை நாட்களில் அவன் காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவான். மீண்டும் திரும்பிவருவது இரவு அகாலத்தில்தான். அவன் நகருக்குச் சென்று அங்கு டிராமா பார்த்துவிட்டு வருகிறான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் நகரத்திலிருந்து யாருமே அவனைப் பார்க்க வரக் காணோம். நாளாக நாளாக தன் மகன் தன்னிடம் வரவரப் பேச்சைக் குறைத்துக் கொண்டு வருவதாக அவளுக்குப் பட்டது. என்றாலும், அவன் சமயங்களில் அவளுக்குப் புரியாத புதுப்புது வார்த்தைகளைப் பிரயோகித்துப் பேசுவதை அவள் உணர்ந்திருந்தாள். மேலும், அவனிடம் முன்னிருந்த கொச்சையான, கூர்மையான பேச்சு மறைந்து கடந்தது என்பதை அவள் அறிவாள்: அவனது நடவடிக்கைகளில் தோன்றிய பல புதுமைகள் அவளது கவனத்தைக் கவர்ந்தன. அவன் அலங்காரமாக உடை உடுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டான்; தன் உடை உடல், இவற்றின் சுத்தத்தில் அவன் அதிகம் கவனம் செலுத்தினான். அவனது அசைவுகள் மிகவும் லாவகமாகவும், நாசூக்காகவும் இருந்தன; பழகும் முறையும் எளிமையும் மென்மையும்


  1. பாஷா–பாவெல் என்ற பெயரைச் செல்லமாக அழைப்பது–மொ-ர்.