பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

315


“நீ என்னைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்றாள் தாய்.

அந்த இளைஞர்கள் மூவரும் மெதுவாய் சோபியாவிடம் வந்து, அசடு வழியும் நட்புரிமையோடு அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அருமையான, அன்பான, அந்தரங்கமான இன்ப உணர்ச்சிக்கு ஆளானார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது, இந்த உணர்ச்சி அதனது புதுமையினால் அவர்களைக் கலங்கச் செய்வதுபோலத் தோன்றியது. அந்த இளைஞர்கள் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் தூக்கம் விழித்துச் சிவந்துபோன தன் கண்களால் சோபியாவைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டார்கள்:

“போவதற்கு முன்னால், கொஞ்சம் பால் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டான் யாகவ்.

“பால் இருக்கிறதா?” என்றான் எபீம்.

“இல்லை” என்று கூறிக்கொண்டே, தலையைத் தடவினான் இக்நாத்: “நான் அதைச் சிந்திவிட்டேன்.”

அவர்கள் மூவரும் சிரித்தார்கள்.

அவர்கள் பாலைப் பற்றித்தான் பேசினார்கள், என்றாலும் அவர்கள் வேறு எதைப்பற்றியோ சிந்தித்துக்கொண்டிருப்பதாக, தன்மீதும் சோபியா மீதும் மனம் நிறைந்த பரிவோடும் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது. இந்த நிலைமை சோபியாவின் உள்ளத்தைத் தொட்டுச் சிறு குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. அவளும் அந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க முடியாமல், குன்றிப்போனாள். அவளால் பின் வருமாறுதான் சொல்ல முடிந்தது:

“நன்றி, தோழர்களே!”

அந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவள் தங்களைப் பார்த்துச் சொன்ன அந்த வார்த்தை ஓர் ஊஞ்சலைப் போன்று கொஞ்சங் கொஞ்சமாக ஆகாயத்தில் தூக்கிச் செல்வதுபோல் அவர்களுக்குப்பட்டது.

அந்த நோயாளி திடீரெனப் பலத்து இருமினான். அணைந்துகொண்டிருந்த நெருப்பில் கரித்துண்டுகள் கனன்று மினுமினுக்கவில்லை.

“போய்வாருங்கள்” என்று அமைதியாகக் கூறினார்கள் முஜீக்குகள், அந்தச் சோகமயமான வார்த்தை அப்பெண்களின் காதுகளில் வெகுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.