பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

319


அவளது மார்பின் மீது மோதி மோதி, இதயத்தைக் கழுவிவிடுவது போலவும், இதயத் துடிப்பை மிகுந்த நிதானத்தோடு சமனப்படுத்துவது போலவும் தோன்றியது: மேலும் நன்றாக நீர்பாய்ச்சியதால், ஆழமாய் வேரோடிப் பாய்ந்த வித்துக்களைப்போல் அவளது சிந்தனைகள் முளைத்துக்கிளைத்துப் பரந்து பரவின, அந்தச் சிந்தனைக் கிளைகள் அந்தச் சங்கீதத்தின் மகிமையால் வார்த்தைகளாகப் பூத்து வெடித்துப் புன்னகை சொரிந்து வெளிப்பட்டன.

சோபியாவின் கச்சிதமின்மையை மட்டும் தாயால் சமாளித்துக் கொண்டு போக முடியவில்லை. சோபியா எப்பொழுதும் தான் குடிக்கும் சிகரெட்டுத் துண்டுகளையும், தனது துணிமணிகளையும் கண்ட கண்ட இடத்தில் தாறுமாறாய் விட்டெறிந்தாள். அவளது ஆரவாரமான பேச்சுக்களைத் தாங்கிக்கொண்டிருப்பதோ தாய்க்கு இதையும் விடச் சிரமமாயிருந்தது. நிகலாயோ தெளிந்த நிதான புத்தியோடும் ஆழ்ந்த பொருளமைதியோடும் தனது வார்த்தைகளை எப்போதும் அளவிட்டு உயிர்கொடுத்துப் பேசுவான்; சோபியாவின் பேச்சோ இதற்கு நேர் எதிர்மறையானதாகத் தாய்க்குத் தோன்றியது. தன்னை மிகவும் பெரியவளாகக் காட்டிக்கொள்ள விரும்பும் ஒரு குமரியைப் போலவே சோபியா நடந்துகொள்வதாகவும், அவள் மற்ற மனிதர்களையெல்லாம் விளையாட்டுச் சாமான்களைப் போலவே கருதுவதாகவும் தாய்க்குத் தோன்றியது. அவள் உழைப்பின் புனிதத்துவத்தைப் பற்றிப் பேசுவாள். ஆனால் தன்னுடைய கச்சிதமின்மையால், தாய்க்கு எப்போதும் அதிகத் தொல்லை கொடுப்பாள்; அவள் சுதந்திரத்தைப்பற்றி காரசாரமாய்ப் பேசுவாள்; என்றாலும் அவள் தனது பொறுமையின்மையாலும், வறட்டு முரண்வாதத்தாலும் பிறரை எப்போதுமே அடக்கியாள விரும்புவதாகவே தாய்க்குத் தோன்றியது. அவளது போக்கு ஒரே முரண்பாடுகள் நிறைந்ததாயிருந்தது, இதைத் தாய் உணர்ந்திருந்ததால், தாய் அவளிடம் எப்போதும் ஜாக்கிரதையாகவே நெருங்கிப் பழகினாள்; நிகலாயிடம் எந்தவிதமான நிரந்தரமான அன்புணர்ச்சி கொண்டிருந்தாளோ. அதே உணர்ச்சி அவளுக்குச் சோபியாவின் மீது ஏற்பட்டவில்லை.

நிகலாய்க்கு எப்போதுமே பிறரைப் பற்றிய சிந்தனைதான்; அந்தச் சிந்தனையோடுதான், அவன் தனது ஒரே மாதிரியான இயந்திர இயக்கம் போன்ற வாழ்க்கையை நடத்திவந்தான். காலையில் எட்டு மணிக்கு அவன் தேநீர் குடிப்பான். தேநீர் குடிக்கும்போதே பத்திரிகையைப் படித்துத் தாயிடம் செய்திகளை எடுத்துக் கூறுவான். அவன் கூறுவதைக் கேட்கும்போது, திடீரென ஓர் உண்மை அவள் உள்ளத்தில் புலனாகிச் சிலிர்க்கும்; வாழ்க்கை என்னும் இந்த மாபெரும் இயந்திரம் எப்படிக்