பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

321


அந்தப் படங்களில் அவள் இயற்கையின் படைப்பாற்றலைக் கண்டாள். பல்வேறு விதமான இயற்கைக் காட்சிகள் அவள் மனத்தைத் திகைக்க வைத்தன. வாழ்க்கை என்பது எல்லையற்று விரிந்து பெருகிக் கொண்டிருந்தது. கண்ணின் முன்னால் அவள் இதுவரையில் அறிந்திராத ஒர் அதிசயத்தை ஒரு மகோந்நதத்தை எடுத்துக் காட்டியது. அது அவளது விழிப்புற்ற இதய தாகத்திலே தனது குறையாத அழகாலும் அமோகமான வளத்தாலும் நிறைவைப் பொழிந்து கிளர்ச்சியுறச் செய்தது. விலங்கு இனங்களை விளக்கும் சித்திரப் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வதில் அவளுக்கு ஒரு தனி ஆனந்தம். புத்தகம் அன்னிய மொழியிலிருந்த போதிலும், அந்தச் சித்திரங்களிலிருந்தே அவள் இந்தப் பூலோகத்தின் விசாலத்தையும், அழகையும் செல்வத்தையும் உணர்ந்தறிய முடிந்தது.

“அம்மாடி! இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது! என்று அவள் ஒரு நாள் நிகலாயிடம் வியந்து போய்க் கூறினாள்.

அவளுக்குப் பூச்சி பொட்டுக்களின் சித்திரங்களைப் பார்ப்பதில் பேரானந்தம்: அதிலும் வண்ணாத்திப் பூச்சிகளைக் காண்பதில் ஓர் அலாதி ஆசை. அவற்றின் சித்திரங்களை வியப்போடு பார்த்துக்கொண்டே அவள் பேசுவாள்.

“நிகலாய் இவானவிச்! இவை அழகாயில்லை? இந்த மாதிரியான அற்புத அழகு எங்கெங்கெல்லாம்தாம் பரந்து கிடக்கிறது. ஆனால், நமது கண்ணுக்கு அவை படுவதேயில்லை; நாம் அவற்றைக் கவனிக்காமலேயே விட்டுவிடுகிறோம். எதையுமே அறிந்து கொள்ளாமல், தங்களது கண்களைக் குளிரவைக்கும் காட்சிகளைக் காணாமல், அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு நேரம் இல்லாமல், ஆசை கூட இல்லாமல் மனிதர்கள் பரபரத்துத் திரிகிறார்கள். இந்த உலகத்திலே எத்தனை செல்வங்கள் இருக்கின்றன. எத்தனை எத்தனை அற்புதமான உயிரினங்கள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்துகொண்டால் நமக்கு எவ்வளவு ஆனந்தம் ஏற்படும்? ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவருக்காக இருக்கிறது. ஒவ்வொன்றும் எல்லோருக்காகவும் இருக்கிறது —- நான் சொல்வது சரிதானே?’

“ஆமாம். ரொம்ப சரி” என்று புன்னகை செய்துகொண்டே கூறிய நிகலாய் தாய்க்கு இன்னொரு படப் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தான்.

இரவு நேரங்களில் அவனைப் பார்க்க எத்தனையோ பேர் வந்து போவார்கள். அவனது விருந்தாளிகளில் சிலர் முக்கியமானவர்கள். அலெக்சி வசீலியவிச்- அவன் வெளுத்த முகமும் கறுத்த தாடியும்