பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

17


நிறைந்ததாக இருந்தது. அவை அனைத்தும் தாயின் உள்ளத்தைக் கவலைக்குள்ளாக்கின. அவளோடு அவன் பழகும் முறை கூடப் புதிய வகையாக இருந்தது. சமயங்களில் அவனே வீட்டைப் பெருக்குவான். ஞாயிற்றுக்கிழமைகளில் அவனே தன் படுக்கையைச் சீர்படுத்திக் கொள்வான். பொதுவாக அவளது வேலைகளுக்கு அவனும் உதவ முன் வந்தான். அந்தக் குடியிருப்பிலுள்ள எவருமே அது மாதிரி என்றும் செய்வதில்லை.

ஒரு நாள் அவன் ஒரு படத்தைக் கொண்டு வந்து சுவரில் மாட்டிவைத்தான். அதில் மூன்று மனிதர்கள் உரையாடியபடியே பாதை வழியே ஹாயாக நடப்பது சித்திரிக்கப்பட்டிருந்தது.

“இதுதான் உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து; எம்மாஸை நோக்கிச் செல்கிறார்” என்றான் பாவெல்.

அந்தப் படம் தாய்க்கு ஆனந்தம் தந்தது. எனினும் அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

“கிறிஸ்துவிடம் உனக்கு இவ்வளவு பக்தியிருந்தால், நீ ஏன் தேவாலயத்துக்கே போகமாட்டேன் என்கிறாய்?”

பாவெலுக்கு நண்பனான ஒரு தச்சன் கொடுத்திருந்த அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. அந்த அறை மங்களகரமாகக் காட்சியளித்தது.

அவன் தன் தாயை வழக்கமாக பன்மையில்தான் அழைப்பான். ஆனால் சமயங்களில் மிகுந்த அன்போடு அவளை ஒருமையில் அழைப்பதுமுண்டு.

“என்னைப்பற்றி நீ ஒன்றும் கவலைப்பட்டுக் கொண்டிராதே அம்மா. இன்று ராத்திரி நான் நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு வருவேன்”.

அவன் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது வார்த்தைகளில் ஏதோ ஒரு பலமும் அழுத்தமும் இருப்பதாக அவளுக்குப் பட்டது.

ஆனால் அவளது பயவுணர்ச்சிகள் அதிகரித்தன. அதன் காரணம் அவளுக்குப் புலப்படவில்லை. அவளது இதயம் அசாதாரணமான ஏதோ ஒரு முன்னுணர்ச்சியால் குறுகுறுத்தது. சமயங்களில் அவளுக்குத் தன் மகனது நடவடிக்கையைக் கண்டு அதிருப்திகூட எற்படுவதுண்டு. அப்போது அவள் நினைத்துக்கொள்வாள்.

“மற்றவர்கள் எல்லாம் சாதாரணமாகத்தானே நடந்து கொள்கிறார்கள். இவன் மட்டும் சந்நியாசி மாதிரி இருக்கிறானே. அதிலும் இவ்வளவு கண்டிப்பாகவா? இவன் வயதுக்கு இது கூடாது!”