பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

329


இன்பமும் பயங்கலந்த நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த குழப்ப உணர்ச்சியோடு நேசித்து வந்த அதே கிறிஸ்துநாதர்தன்னருகே நெருங்கி வந்துவிட்டது போன்று தாய்க்குத் தோன்றியது. இப்போதோ இயேசுகிறிஸ்து முன்னைவிட உயர்ந்த ஸ்தானத்தில் கண்ணெட்டும் தூரத்தில் ஒளிரும் முகத்தோடு மகிழ்வாய் வீற்றிருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. மனிதர்களின் நண்பராக கிறிஸ்துவின் பெயரைக்கூட மரியாதையின் காரணமாகச் சொல்லக்கூசிய மக்கள், அவருடைய திருநாமத்துக்காகத் தங்கள் இரத்தத்தைத் தாராளமாகச் சிந்தினார்கள். அந்தப் புனித இரத்தத்தால் கழுவப்பெற்று, புத்துணர்ச்சிபெற்று, உண்மையாகவே அவர் மீண்டும் உயிர்தெழுந்து வந்துவிட்டது போல அவளுக்குத் தோன்றியது. தனது சுற்றுப் பிரயாணங்களை முடித்துவிட்டு, அவள் திரும்பி வந்து நிகலாயைச் சந்திக்கும் போது மிகுந்த உணர்ச்சியுைம் உவகையும் கொண்டவளாக இருப்பாள், வழியெல்லாம் அவள் கண்ட விஷயங்களும் கேட்ட விஷயங்களுமே அந்த உவகைக்குக் காரணம். தனது கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தியில் அவள் மனம் குதூகலித்து நிறைவுபெறும்.

“இந்த மாதிரிக் சுற்றித் திரிந்து எவ்வளவோ விஷயங்களைக் காண்பது மிகவும் நன்றாயிருக்கிறது” என்று ஒரு நாள் மாலை அவள் அவனிடம் சொன்னாள். “இவற்றால் நாம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜனங்களே வாழ்க்கையின் கடைக்கோடிக்கே தள்ளிச் செல்லப்பட்டிருக்கிறார்கள், வாழ்வின் எல்லைக் கோடியிலே அவர்கள் என்ன நடந்திருக்கிறது என்பதொன்றும் தெரியாது தட்டுத் தடுமாறித் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களைப் பிறர் ஏன் இப்படி நடத்தவேண்டும் என்பதை மட்டும் அவர்களால் நினைத்து நினைத்து அதிசயப்படாமலிருக்க முடியவில்லை, அவர்களை ஏன் இப்படி விரட்டியடிக்கவேண்டும். எல்லாமே நிறையப் பெருகிக் கிடக்கும் போது அவர்கள் மட்டும் ஏன் பசியால் வாட வேண்டும்? எங்குப் பார்த்தாலும் கல்வியறிவு நிறைந்திருக்கும்போது, அவர்கள் மட்டும் ஏன் அஞ்ஞான இருளில் ஒன்றுமறியாத பாமரர்களாயிருக்கவேண்டும்? மக்களைப் பணக்காரன் என்றோ ஏழை என்றோ கருதாமல் தனது அன்பு மிக்க குழந்தைகளாகக் கருதும் அந்தத் தயாபரன், அந்தக் கடவுள் எங்கு போனார்? தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி, மக்கள் சிந்திக்கும் போது அவர்களுக்கு ஆத்திரம்தான் பொங்குகிறது. இந்த அநீதியைத் தவிர்க்க ஏதேனும் செய்யாவிட்டால், அந்த அநீதியே தங்களைத் துடைத்துத் தூர்த்து அழித்துவிடும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

மக்களது வாழ்க்கைக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி அந்த மக்களிடமேதான் பேச வேண்டும் என்ற ஆசை அவளுக்கு