பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

மக்சீம் கார்க்கி


எத்தனையோ சமயங்களில் எழுவதுண்டு, சமயங்களில் இந்த ஆசையை அடக்கியாள்வதே அவளுக்குப் பெரும்பாடாய்விடும்.

தாய் சித்திரப் புத்தகங்களைக் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதை நிகலாய் கண்டுவிட்டால் உடனே லேசாகப் புன்னகை புரிவான்; அவளுக்கு உலகத்து அசிசயங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுவான், மானுடத்தின் அசகாயத் துணிச்சலைக் கண்டு வியந்து போய் அவள் திடுக்கெனக் கேட்பாள்.

“இப்படியும் நடக்க முடியுமா?”

தனது தீர்க்கதரிசனத்தின் உண்மையின் மீதுதான் கொண்டுள்ள அசைக்க முடியாத, ஆணித்தரமான உறுதியோடு நிகலாய் அவளைத் தனது கண்ணாடியணிந்த கண்களால் அன்பு ததும்பப் பார்ப்பான்; பார்த்தவாறு எதிர்காலச் சித்திரத்தை விளக்கிச் சொல்லத் தொடங்குவான்.

“மனிதனுடைய ஆசைகள் அளவு கடந்தவை. அவனது சக்தியோ வற்றி மடியாதது! என்றாலும் கூட, இந்த உலகத்தில் ஆத்மபலம் சிறிது சிறிதாகத்தான் பெருகுகிறது. ஏனெனில், இன்று சுதந்திரமாக இருக்கப் பிரியப்படுபவர்கள் எல்லாம் அறிவைச் சேகரிப்பதை விட, பணத்தையே சேகரிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால், மாந்தர்கள் இந்தப் பேராசையைத் தொலைத்து. தங்களை அடிமைப்படுத்தும் பலவந்தமான உழைப்பிலிருந்து விடுதலை பெற்றால்.....”

இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. என்றாலும் அவற்றைத் தூண்டிவிடும். அமைதி நிறைந்த நம்பிக்கை மட்டும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

“உலகத்தில் சுதந்திரமாக இருப்பவர்கள் மிகச் சிலரே; அதுதான் துர்ப்பாக்கியம்!” என்றாள் அவள்.

அவளுக்கு இதுமட்டும் புரிந்தது. பேராசையிலிருந்தும் குரோதத்திலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டவர்கள் அவளுக்குத்தெரியும். அந்த மாதிரியானவர்கள் மட்டும் அதிகமாக இருந்தால் வாழ்க்கையின் இருளும் பயங்கரமும் தொலைந்து போகும்; வாழ்க்கை எளிமையாகவும் ஒளி பெற்றும் மகோந்நதமாகவும் விளங்கும்.

“கொடியவர்களாகும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள்!” என்று துயரத்தோடு சொன்னான் நிகலாய்.

அதை ஆமோதித்து அந்திரேய் முன்னர் சொன்ன வார்த்தைகளை எண்ணி, தலையை அசைத்துக்கொண்டாள் தாய்.