பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

331



9

எப்போதும் வேலையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வீடு திரும்பி வரும் நிகலாய், ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக நேரம் கழித்துத் திரும்பி வந்தான். வந்தவன் தன்னுடைய உடுப்புகளைக்கூட, களையாமல் கைகளைப் பதறிப்போய் பிசைந்துகொண்டே சொன்னான்;

“நீலவ்னா! நம்முடைய தோழர்களில் ஒருவன் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டானாம். யாராயிருக்கலாம்? என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை....”

தாயின் உடம்பு ஆட்டம் கண்டு அசைந்தது.

“பாவெலாயிருக்குமோ?” என்று ஓர் ஆசனத்தில் உட்கார்ந்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள் அவள்.

“இருக்கும்!” என்று தோளை அசைத்துக்கொண்டே சொன்னான் நிகலாய்: “ஆனால் அவனை மறைத்து வைப்பதற்கு நாம் என்ன செய்வது? அவனை எங்கே கண்டுபிடிப்பது? அவனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நான் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்தாய்விட்டது; அலைந்தது முட்டாள்தனம்தான். ஆனால், நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே. நான் பழையபடியும் போகிறேன்....”

‘நானும் வருகிறேன்’ என்று கத்தினாள் தாய்.

“நீங்கள் இகோரிடம் போய், அவனுக்கு ஏதாவது விஷயம் தெரியுமா? என்று தெரிந்துகொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவன் அவசர அவசரமாக வெளியேறினான்.

தாய் தன் தலை மீது ஒரு சவுக்கத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டு அவனைத் தொடர்ந்து தெருவுக்கு விரைந்து சென்றாள்; அவள் மனத்தில் நம்பிக்கை நிறைந்திருந்தது. அவளது கண்கள் செவ்வரி படர்ந்து அசைந்தன; அவளது இதயம் படபடத்துத் துடித்து., ஒடுகின்ற மாதிரி அவளை வேகமாக விரட்டியடித்தது. அவள் தன் தலையைக் குனிந்தவாறே எதிரிலுள்ள எவற்றையுமே பார்க்காமல் நான் எதிர்பார்த்துச் செல்வதை எதிரே கண்டுவிடலாம் என்ற எண்ணத்தோடேயே சென்று கொண்டிருந்தாள்.

“நான் அங்கே அவனைக் கண்டுவிட்டேன் என்றால்!”— அவளது இந்த நம்பிக்கையே அவளை விரட்டி விரட்டி முன்னேறச் செய்தது.

பொழுது உஷ்ணமாயிருந்தது. அவளும் களைத்துப்போய் மூச்சுவிடத் திணறினாள். இகோரின் வீட்டுப் படிக்கட்டுக்குச் சென்றவுடன் அவளால் ஒரு அடி கூட முன்னே செல்ல முடியவில்லை. அவள்