பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மக்சீம் கார்க்கி


மறுபடியும் அவள் சிந்திப்பாள்.

“ஒரு வேளை ஏதாவது பெண் பிடித்திருக்கிறானோ?”

ஆனால், பெண்களுடன் திரிவதற்கெல்லாம் பணம் நிறையவேண்டும். அவனோ தன் சம்பளத்தில் அநேகமாக முழுவதையும் தாயிடம் கொடுத்துவிடுகிறான்.

இப்படியாக வாரங்களும் மாதங்களும் ஓடிக்கழிந்து வருஷங்களும் இரண்டு முடிந்தன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சந்தேகமும் தெளிவற்ற சிந்தனைகளால் உள்ளுக்குள்ளாக மருகி மருகி வாழும் மோன வாழ்வும் கொண்ட இரண்டு வருஷங்கள்.

4

ஒரு நாள் இரவு பாவெல் சாப்பாட்டுக்குப்பின், ஜன்னலின் திரையை இழுத்து தன் தலைக்கு மேலாகவுள்ள ஆணியில் தகர விளக்கை மாட்டினான். பிறகு ஒரு மூலையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். அவனது தாய் பண்ட பாத்திரங்களைக் கழுவிவிட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்; மெதுவாக அவன் பக்கம் சென்றாள். அவன் தலையை உயர்த்தி தன் தாயிடம் வந்த காரியத்தை வினவும் முகபாவத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஒன்றுமில்லை. பாஷா! ஒன்றுமில்லை!” என்று முனகிவிட்டு, அவன் மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்; அவளது புருவங்கள் மட்டும் தைரியமற்று நெளிந்து கொடுத்தன. பிறகு அவள் தனது சிறிது நேரச் சிந்தனைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டு மீண்டும் தன் மகனை நெருங்கினாள்.

“நீ எப்போது பார்த்தாலும் எதையோ படித்து வண்ணமாயிருக்கிறாயே. அதைத்தான் கேட்க எண்ணினேன்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.

அவன் புத்தகத்தை மூடினான்.

“உட்கார், அம்மா!”

அவனது தாய் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்து, முதுகை நிமிர்த்தினாள்; ஏதோ ஒரு முக்கிய விஷயத்தைக் கேட்பதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டாள்.

பாவெல் அவளைப் பார்க்காமலேயே பேச ஆரம்பித்தாள்; அவனது குரல் தணிந்திருந்தபோதிலும், அது ஏனோ உறுதி வாய்ந்ததாக இருந்தது.