பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

339


அவன் மிகுந்த சிரமத்தோடு உதடுகளை அசைத்துக் கொண்டு தனது அண்டை வீட்டுக்காரியின் வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவனது கண்கள் களிப்பெய்தி நகைத்தன. அவள் வேண்டுமென்றே அவளைக் கேலி செய்ததாகத் தாய் கருதினாள். அவனது நீலம் பாரித்த ஈரம் படிந்த முகத்தைப் பார்த்துவிட்டு, பயப் பீதியோடு தனக்குத் தானே நினைத்துக்கொண்டாள்.

“இவன் செத்துக்கொண்டிருக்கிறான்.”

லுத்மீவா திரும்ப வந்தாள். உள்ளே நுழைந்தவுடன் அவள் கதவை ஜாக்கிரதையாகத் தாழிட்டுவிட்டுத் தாயின் பக்கம் திரும்பினாள்.

“உங்களுடைய தோழர் சீக்கிரமே உடை மாற்றிக்கொள்ள வேண்டும். என் அறையை விட்டுக்கூடிய சீக்கிரம் போக வேண்டும். எனவே நீங்கள் உடனே போய் அவனுக்கு மாற்று உடைகள் வாங்கி வாருங்கள். இந்தச் சமயத்திலே சோபியாவும் இல்லாது போய்விட்டாள். அது ஒரு பெரிய சங்கடம். ஆட்களை இனம் மாற்றி வேஷம் போடுவதில் அவள்தான் மிகவும் கைதேர்ந்தவள்.”

“அவள் நாளைக்கு வருகிறாள்” என்று கூறிக்கொண்டே சவுக்கத்தை எடுத்துத் தோளின் மீது போட்டுக்கொண்டாள் தாய்.

அவளுக்கு எப்போதெப்போதெல்லாம் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவளது இதயத்தில், அந்த வேலையைச் சீக்கிரமாகவும் திறம்படவும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பித் ததும்பும். அந்த வேலையைத் தவிர அந்தச் சமயத்தில் வேறு எதைப்பற்றியுமே அவள் சிந்திக்கமாட்டாள்.

“அவனை எந்த மாதிரி உடை தரிக்கச் சொல்ல உத்தேசம்?” என்று காரியார்த்தமான குரலில், தனது புருவங்களைச் சுழித்துக்கொண்டே கேட்டாள்தாய்.

“அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தத் தோழர் இன்றிரவு போயாக வேண்டும்.”

“இராத்திரி வேளைதான் மோசமானது. தெருவிலே ஜனநடமாட்டமே இருக்காது. போலீசாரும் விழிப்பாயிருப்பார்கள். இவனும் அப்படியொன்றும் கெட்டிக்காரப் பேர்வழியில்லை — உங்களுக்குத் தெரியாதா?”

இகோர் கரகரத்துச் சிரித்துக்கொண்டான்.

“நான் உன்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் தாய்.