பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

மக்சீம் கார்க்கி


இருமிக்கொண்டே தலையை அசைத்து ஆமோதித்தான் அவன்.

“நீங்களும் நானும் இவனது படுக்கையருகே மாறி மாறித் துணைக்கு இருக்கலாமா?” என்று தனது. கரிய கண்களால் தாயைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் லுத்மீலா. “உங்களுக்குச் சம்மதம்தானே? சரி, இப்போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்வாருங்கள்.”

அவள் அதிகாரம் கலந்த அன்போடு தாயின் கரத்தைப் பற்றி அவளை வாசல் நடைக்குக் கூட்டிச் சென்றாள். வாசல் நடையைக் கடந்து வெளியே வந்ததும், லுத் மீலா நின்று கொண்டே பேசினாள்

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருட்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்....”

அவள் தன் கரங்களை இறுகப் பற்றி அழுத்தினாள். அவள் பிடித்தபிடியில் எலும்புகளே நொறுங்கும் போலிருந்தது; கைகளைப் பிடித்தவாறே அவள் கண்களை மூடினாள். இந்தப் பேச்சு தாயைக் கலவரப்படுத்தியது.

“அட கடவுளே என்ன சொல்லுகிறீர்கள்?” என்று குழறினாள் தாய்.

“சரி போகிறபோது எங்கேயாவது ஒற்றர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு போங்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் லுத்மீலா, அவள் தன் கரங்களைத் தன் முகத்துக்கு நேராக உயர்த்தி நெற்றிப் பொருத்துக்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். அவளது உதடுகள் துடித்தன; முகம் சாந்தமடைந்தது.

“எனக்குத் தெரியும்” என்று பெருமிதத்தோடு சொன்னாள் தாய்.

வெளி வாசலுக்குச் சென்றவுடன் அவள் ஒரு நிமிஷம் அங்கேயே நின்று தன்னுடைய துப்பட்டியைச் சரி செய்துகொண்டே சுற்றுமுற்றும் கூர்மையோடு, எனினும் வெளிக்குத்தெரியாமல், கவனித்துக் கொண்டாள். கூட்டத்தில் கூட ஒற்றர்களை அடையாளம் கண்டு தீர்மானிப்பதில் அவள் அநேகமாகத் தவறுவதே இல்லை. அவர்களது எடுப்பாய்த் தெரியும் கவனமற்ற நடை, அவர்களது அசாதாரணமான பாவனைகள், சோர்வும், எரிச்சலும் நிறைந்த அவர்களது முகபாவம், இவற்றிற்கெல்லாம் பின்னால், மோசமாக ஒளிந்துகொண்டிருக்கும் அவர்களது கூரிய கண்களிலே மறைந்துகிடக்கும். குற்றம் நிறைந்த அச்சம் கொண்ட நோக்கு— பலவற்றையும் அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.