பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

341


ஆனால் இந்தத் தடவையோ அவள் அந்த மாதிரி முகங்கள் எதையும் காணவில்லை. எனவே தெரு வழியாக அவசர அவசரமாக நடந்து சென்றாள். அவள் ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, வண்டிக்காரனை மார்க்கெட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டாள். மார்க்கெட்டில். அவள் நிகலாய்க்காக வாங்க வேண்டிய துணிமணிகளைத் தேர்ந்தெடுப்பதில் விடாப்பிடியாய் பேரம் பேசி விலையைக் குறைத்துக் கேட்டாள். அத்துடன் தன்னுடைய குடிகாரக் கணவனால்தான் இந்த மாதிரியான நிலைக்குத் தான் வந்துவிட்டதாகவும், அவனுக்கு மாதாமாதம் ஒவ்வொரு புதுச்சட்டை துணிமணி எடுத்துக் கொடுக்க நேர்ந்துவிட்டதாகவும் ஒரு பொய்க்கதையையும் கடைக்காரனிடம் கூறினாள். அவளது கட்டுக்கதையைக் கேட்டு, கடைக்காரர்கள் கொஞ்சம் கூட மசியவில்லை. இருந்தாலும் அதுவே அவளுக்கு ஒரு பெரும் ஆனந்தத்தைத் தந்தது. வழியிலே அவளுக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. நிகலாய்க்குப் புதிய துணிமணிகள் வாங்க வேண்டிய அவசியத்தைப் போலீஸ்காரர்களும் உணரக் கூடுமென்றும், எனவே அவர்கள் தங்களது ஒற்றர்களை மார்க்கெட்டுக்கும் அனுப்பியிருக்கக் கூடுமென்றும் அவள் நினைத்தாள். எனவே புறப்பட்டுச் சென்றது போலவே மிகுந்த ஜாக்கிரதையோடும் கவனத்தோடும் அவள் இகோரின் அறைக்குத் திரும்பி வந்தாள். பிறகு அவள் நிகலாயுடன் நகரின் எல்லைவரை காவலாகச் சென்றாள். அவர்கள் தெருவில் ஆளுக்கொரு பக்கமாக நடந்து சென்றார்கள். நிகலாய் தலையைத் தாழ்த்திக்கொண்டு தத்தித்தத்தி நடந்து செல்வதையும், அவன் அணிந்திருந்த நீளமான பழுப்பு நிறக் கோட்டினால், அவனது கால்கள் அடிக்கடி முட்டிக்கால் தட்டிக் கொள்வதையும், மூக்கின் மீது வந்து விழுந்து மறைக்கும். தொப்பியை அவன் அடிக்கடி பின்னால்தள்ளிவைத்துக் கொள்வதையும் கண்டு தாய்க்குச் சிரிப்பாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. ஆள் நடமாட்டமே அற்ற ஒரு சந்தில், அவர்கள் சாஷாவைச் சந்தித்தார்கள்; நிகலாயைப் பார்த்துத் தலையை அசைத்து விடைபெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பினாள்.

“ஆனால் பாவெல் மட்டும் இன்னும் சிறையிலேயே இருக்கிறான்.... அந்திரேயும்....” என்று துக்கத்தோடு நினைத்துக்கொண்டாள் அவள்