பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

19


"நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன. இவையெல்லாம் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அச்சிடப் பெறுகின்றன. இந்தப் புத்தகங்களோடு அவர்கள் என்னைக் கண்டுபிடித்தால் என்னைச் சிறையில்தான் போடுவார்கள். சிறையில்தான்! ஏன் தெரியுமா? நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேனே. அதனால்தான், புரிந்ததா?”

திடீரென அவளுக்கு மூச்சு முட்டியது. அவள் தன் கண்களை அகலத் திறந்து மகனைப் பார்த்தாள். அவன் ஒரு அன்னியன் போலத் தோன்றியது அவளுக்கு: அவளது குரல் கூட மாறிப்போயிருந்தது: அந்தக் குரலின் ஆழமும் அழகும் செழுமையும் நிறைந்து இருப்பதாகத் தோன்றியது. அவன் தனது அரும்பு மீசையைத் திருகினான்; குனிந்து நின்ற புருவங்களுக்கு மேலாக, ஒரு மூலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தன் மகனைக் கண்டு பயந்தே போனாள்; மகனுக்காகப் பரிதாபப்பட்டாள்.

“நீ ஏன் இப்படிச் செய்கிறாய். பாஷா?” என்று கேட்டாள்.

“ஏன் என்றால் —-நான் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று அவன் அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னான்.

அவனது குரல் மிருதுவாக இருந்தது. எனினும் உறுதி வாய்ந்திருந்தது. அவனது கண்களில் அசைவற்ற ஒரு ஒளியும் நிறைந்திருந்தது. தன் மகன் ஏதோ ஒரு பயப்படக்கூடிய ரகசியமான காரியத்துக்குத் தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்டான் என்ற உணர்ச்சி அவளது இதயத்தில் கிளர்ந்தது. வாழ்க்கையில் எதுவுமே தடுக்க முடியாதவைதாம் என்றே அவள் கருதினாள்; எனவே அதைப்பற்றி அவள் மேலும் கேட்காமல் அடங்கிப் போனாள். துன்பமும் துக்கமும் இதயத்தை அழுத்த வார்த்தையின்றி அமைதியாக அழுதாள் அவள்.

“அழாதேயம்மா” என்று அன்பும் ஆதரவும் நிறைந்த குரலில் சொன்னான் பாவெல்: ஆனால் அவளுக்கோ அவன் பிரிவதற்கு விடை பெறுவது போலத் தோன்றியது.

“நாம் எந்த மாதிரி வாழ்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது எண்ணிப்பார். அம்மா. உனக்கு நாற்பது வயதாகிறது. இதுவரை நீ என்னத்தைக் கண்டு விட்டாய்? அப்பா உன்னை அடித்தார்—