பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

மக்சீம் கார்க்கி


வெளியேறியது. தெரு வழியாக மெதுவாக நடந்து வரும்போதே அவள் அவனது துடியான கண்களையும், அவனது கம்பீரத்தையும், வாழ்க்கையைப்பற்றி அவன் சொன்ன கதைகளையும் நினைவு கூர்ந்தாள்.

“நல்லவனுக்கு, வாழ்வதுதான் சிரமமாயிருக்கிறது. சாவதோ லகுவாயிருக்கிறது. நான் எப்படிச் சாகப் போகிறேனோ?” என்று அவள் நினைத்தாள்.

அவளது மனக்கண் முன்னால், அந்த வெள்ளைச் சுவர் சூழ்ந்த, வெளிச்சம் நிறைந்த ஆஸ்பத்திரி அறையில் டாக்டரும், லுத்மீலாவும் ஜன்னல் முன்னால் நிற்கின்ற காட்சியும். அவர்களது முதுகுப்புறத்தில் இகோரின் இறந்து போன கண்கள் வெறித்து நோக்குவது போன்ற காட்சியும் தெரிந்தன, திடீரென அவளுக்கு மனித குலத்தின் மீது ஓர் ஆழ்ந்த அனுதாப உணர்ச்சி ஏற்பட்டு மேலோங்கியது: வேதனை நிறைந்த பெருமுச்சோடு அவள் நடையை எட்டிப் போட்டாள், ஏதோ ஒரு மங்கிய உணர்ச்சி அவளை முன்னோக்கித் தள்ளிச்சென்றது.

“நான் சீக்கிரமே போகவேண்டும்” என்று துக்கத்துடன் நினைத்துக் கொண்டாள், எனினும் ஒரு துணிவாற்றல் பொருந்திய சக்தி, அவளது மனத்துக்குள் இருந்து அவளை முன்னால் உந்தித் தள்ளியது.

11

மறுநாள் முழுவதும் சவ அடக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலேயே தாய் நாளைப் போக்கினாள். மாலையில் நிகலாயும் சோபியாவும் அவளும் தேநீர் அருந்திக்கொண்டிருந்த சமயத்தில் சாஷா கலகலத்துக்கொண்டே விசித்திரமான உத்வேகத்தோடு வந்து சேர்ந்தாள். அவளது கன்னங்கள் சிவந்து போயிருந்தன. கண்களில் உவகை ஒளி வீசியது. அவள் மனத்தில் ஏதோ ஓர் ஆனந்த மயமான நம்பிக்கை நிறைந்து ததும்புவதாகத் தாய்க்குத் தோன்றியது. இகோரின் வாழ்க்கையை நினைத்துத் துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்களது சோக நிலைக்கு எதிர்மறை பாவம்போல, அவளது நடவடிக்கை இருந்தது. அபஸ்வரம் போன்ற அவளது குதூகல பாவம் அவர்கள் மனத்தைப் பேதலிக்கச் செய்து, இருளிலே வெடித்தோங்கும் மாபெரும் தீபாக்கினியைப்போல் அவளது மனத்தையும் கண்ணையும் மழுங்கிக் குருடாக்கியது.

நிகவாய் ஏதோ சிந்தித்தவாறே மேஜைப் பலகையில் விரல்களால் தாளம் போட்டான்; பிறகு சொன்னான்:

“இன்று நீங்கள் உங்கள் வசமே இல்லை. சாஷா!”