பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

351


"அப்படியா? இருக்கலாம்!” என்று குதூகலத்தோடு சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் அவள்.

தாய் அவளை வாய்பேசாமல் பார்த்தாள். அந்தப் பார்வையிலேயே அவளது நடத்தையைக் கண்டித்தாள். அந்தச் சமயத்தில் சோபியா அவளுக்கு அந்த விஷயத்தை ஞாபகமூட்டினாள்;

“நாங்கள் இகோர் இவானவிச்சைப்பற்றி இப்போதுதான் பேசிக் கொண்டிருந்தோம்.”

“அவன் எவ்வளவு அருமையான ஆசாமி!” என்றாள் சாஷா. ‘வாக்கிலே கேலியில்லாமலும், முகத்திலே சிரிப்பில்லாமலும். அவனை நான் என்றுமே பார்த்ததில்லை. மேலும் அவன் என்னமாய் உழைத்தான்!” அவன் ஒரு புரட்சிக் கலைஞன்! புரட்சிச் சிந்தனையிலே தலைசிறந்தவன். எவ்வளவு எளிதாகவும் ஆணித்தரமாகவும் அவன் அநீதியைப் பற்றியும், பொய் பித்தலாட்டங்களைப் பற்றியும், பலாத்காரத்தைப் பற்றியும் விவரித்துக் கூறுவான்!”

அவள் அமைதியுடனும், கண்களிலே சிந்தனை வயப்பட்ட களிப்புனும் பேசினாள். எனினும் அந்தக் கண்களில் மிதந்த களிப்பு அவளது பார்வையிலிருந்த பெருமித நெருப்பை அணைக்கவில்லை; அவளது ஆனந்தவெறி அனைவருக்குமே புரியாததாயினும் தெரியத்தான் செய்தது.

தங்களது தோழன் ஒருவனது மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தை சாஷாவினுடைய உவகை வெறியால் மாற்றிக்கொள்ள, மறந்திருக்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக தாங்கள் மூழ்கியிருக்கும் சோக உணர்ச்சியிலிருந்து வெளியே வர விரும்பாமலே, அவளையும் தங்களது மனவுணர்ச்சியின் நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் தம்மையுமறியாமல் முயன்று கொண்டிருந்தார்கள்.

“இப்போது அவள் செத்துப்போனான்” என்று அழுத்தமாகக் கூறிக்கொண்டே சாஷாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் சோபியா.

சாஷா திடீரென்று கேள்வி பாவம் தொனிக்கும் பார்வையோடு அவர்கள் அனைவரையும் பார்த்தாள்; முகத்தைச் சுழித்தாள். தன் தலையைத் தாழ்த்தி மௌனமானாள்; தன் மயிரை மெதுவாக ஒதுக்கிவிட்டுக்கொண்டாள். சில கணநேரம் திக்குமுக்காடிய பிறகு அவள் திடீரென்று தலை நிமிர்ந்து ஆத்திர வேகம் கொண்ட தொனியில் பேசினாள்.

“செத்துவிட்டான்! அதற்கு என்ன அர்த்தம். சாவது என்றால்? எது செத்தது? இகோரிடம் நான் கொண்டுள்ள மதிப்புச் செத்ததா? தோழன்